உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / இளங்கோவன் மருத்துவ பில்லை இழுத்தடிக்கும் அரசு!

இளங்கோவன் மருத்துவ பில்லை இழுத்தடிக்கும் அரசு!

ப ட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, ''சந்தா மாதிரி, 'கட்டிங்' வசூலிக்கிறாங்க பா...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய். ''எந்த துறையிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''கோவை மாவட்டத்தில், உணவு பாதுகாப்பு துறையினரும், மாநகராட்சியின் சுகாதார பிரிவினரும் மளிகை கடைகள், ஹோட்டல்கள்ல அடிக்கடி ஆய்வு நடத்துறாங்க... அப்ப, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இருந்தா, அபராதம் விதிக்கிறாங்க பா... ''குறிப்பா, ஹோட்டல்கள்ல உணவு பாதுகாப்பு துறையினர் நடத்தும் சோதனையில, உணவுகள் தரமில்லாமலும், சுகாதாரம் இல்லாமலும் இருந்தா, 'சீல்' வச்சிடுவாங்க... ''இந்த துறையின் சில அதிகாரிகள், ஹோட்டல் உரிமையாளர்களிடம், 'வருஷத்துக்கு ஒரு தொகையை வெட்டுங்க... உங்க கடை பக்கமே எட்டி பார்க்க மாட்டோம்'னு பேரம் பேசுறாங்க பா... ''யாராவது தர மறுத்தா, 'உங்க ஹோட்டல்ல அடிக்கடி சோதனை நடத்தி, உணவு பண்டங்களை, 'சாம்பிள்' எடுத்து சோதனைக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்போம்'னு மிரட்டுறாங்க... இதுக்கு பயந்தே பலரும் கப்பம் கட்டுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய். ''அடாவடி அதிகாரி யால, பக்தர்கள் வெறுத்து போயிட்டாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... ''காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி கிராமத்தில், தட்சிணாமூர்த்தி கோவில் கும்பாபிஷேகம் சமீபத்துல நடந்துச்சு... இதுல, கோவில் கோபுரம் மீது ஏறும் தற்காலிக படிக்கட்டு பக்கத்துல, போலீசார் பாதுகாப்பு பணியில ஈடுபட்டிருந்தாவ வே... ''அங்கன இருந்த விஷ்ணுகாஞ்சி போலீஸ் ஸ்டேஷன் அதிகாரி ஒருத்தர், கோவிந்தவாடி ஊராட்சி பெண் தலைவர், உபயதாரர்கள், நிருபர்கள், அர்ச்சகர்களை உள்ளே விட மாட்டேன்னு சொல்லிட்டாரு... அதாவது பரவாயில்ல... எல்லாரையும் ஒருமையில பேசியதும் இல்லாம, ஏதோ கிரிமினல்கள் மாதிரி மிரட்டி விரட்டியும் விட்டுட்டாரு வே... ''யாக சாலையில் இருந்து கலசம் சுமந்துட்டு வந்த சிவாச்சாரியார்களையே ரொம்ப நேரம் காத்திருக்க வச்சு தான், அனுமதிச்சிருக் காரு... இவரது அடாவடி யால, தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் பலரும் நொந்து போய் திரும்பி போயிட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி. ''சவுந்தர்ராஜன், இந்த பேப்பரை அங்க வையும்...'' என, நண்பரை ஏவிய குப்பண்ணாவே, ''மூத்த தலைவரின் மருத்துவ செலவை வழங்காம இழுத்தடிக்கறா ஓய்...'' என்றார். ''யாரு வே அது...'' என கேட்டார், அண்ணாச்சி. ''காங்., கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.,வுமா இருந்த இளங்கோவன், போன வருஷம் டிசம்பர்ல உடல்நலக் குறைவால இறந்து போயிட்டா ரோல்லியோ... பொதுவா, எம்.எல்.ஏ.,க் களின் மருத்துவ செலவை அரசே ஏத்துக்கும் ஓய்... ''அந்த வகையில், இளங்கோவனின் மருத்துவ செலவு, 14 லட்சம் ரூபாயை வழங்க கோரி, அவரது குடும்பத்தினர் அரசுக்கு விண்ணப்பிச்சிருக்கா... ஆனா, அவர் இறந்து ஏழு மாசமாகியும், இதுவரைக்கும் பணத்தை தரல ஓய்... ''அதிகாரிகளிடம் கேட்டா, 'பரிசீலனையில் இருக்கு'ன்னு பதில் தரா... ஆளும் கட்சி கூட்டணியில் முக்கிய கட்சியா இருந்தும், அந்த கட்சியின் தலைவர்களும், அரசிடம் பேசி பணத்தை வாங்கி தர எந்த முயற்சியும் எடுக்கல ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா. ''அடப்பாவமே... 14 லட்சம் ரூபாயைக்கூட தர முடியாத அளவுக்கு அரசின் நிதி நிலைமை மோசமாகிடுச்சாங்க...'' என, அலுத்தபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
ஜூலை 22, 2025 23:41

இளங்கோவன் pro DMK அனுதாபியாச்சே. அப்படியிருந்துமா Bill pending. ?ஒருவேளை காங்கிரஸ் கூட்டணி மாறி விடும் என்ற சந்தேகத்தில் இந்த இழுத்தடிப்போ..?


D.Ambujavalli
ஜூலை 22, 2025 17:06

கோடி கோடியாக இருந்தாலும், அரசுச் சலுகைகளை விட மனது வருமா? இப்போது முதல்வரே அப்பல்லோவில் சிகிச்சை பெறுகிறார், ஏன், லண்டனில் கூட பெற்றதாக கூறப்பெடுக்கிறதே, அதற்கெல்லாம் அரசு கொடுக்காதா ?


suresh Sridharan
ஜூலை 22, 2025 07:00

ஏன் 14 லட்ச ரூபாயும் கூட அவர்களிடம் இல்லையா அந்த அளவுக்கு ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை