துண்டால் பெஞ்சை தட்டியபடியே அமர்ந்த பெரியசாமி அண்ணாச்சி, ''முன்னாள் மத்திய அமைச்சரை சேர்க்க முயற்சி நடக்குல்லா...'' என்றார்.''எந்த கட்சியில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு, அக்., 27ல் விழுப்புரம் அருகே, விக்கிரவாண்டியில நடக்க இருக்குல்லா... இந்த மாநாட்டுல, முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள், அந்த கட்சியில இணையுறதுக்கான பேச்சுகள் நடந்துட்டு இருக்கு வே...''இதுல, விழுப்புரம் தி.மு.க., மற்றும் ம.தி.மு.க.,வுல அசைக்க முடியாத சக்தியா இருந்த, முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் பெயரும் அடிபடுது... இப்ப, இவர் அ.தி.மு.க.,வுல மாநில அமைப்பு செயலரா இருக்காரு வே...''ஆனாலும், கட்சியில எந்த முக்கியத்துவமும் இல்லாத விரக்தியில இருக்காரு... இதனால, இவரை விஜய் கட்சியில இழுத்து போடுறதுக்கான வேலைகள் தீவிரமா நடந்துட்டு இருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.''மொத்தம், 18 சவரன் போன இடம் தெரியல ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''திருப்பூர் மாவட்டம், அவிநாசியில, பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் இருக்கோல்லியோ... இங்க, சமீபத்துல நகைகள் சரிபார்ப்பு பணி நடந்துது ஓய்...''அப்ப, 18 சவரன் நகைகள் கணக்குல குறைஞ்சிருக்கு... ஆனா, 'கோவில் பெயருக்கு களங்கம் வேண்டாம்... நாங்களே, 18 சவரன் நகையை செஞ்சு குடுத்துடறோம்'னு அறங்காவலர் குழு சொல்லியிருக்கு ஓய்...''ஆனா, அதை ஏத்துக்காத அறநிலையத் துறை தணிக்கை அதிகாரிகள், 'கமிஷனரிடம் புகார் பண்ண போறோம்'னு சொல்லிட்டா... கோவில்ல செயல் அலுவலரா இருந்து, 'ரிட்டயர்' ஆன பெரிய மருதுபாண்டியன் காலத்துல தான் இந்த சம்பவம் நடந்திருக்காம்... 'அவரிடம் விசாரணை நடத்தினா, நகைகள் மாயமான விவகாரத்துல, உண்மைகள் தெரிய வரும்'னு பக்தர்கள் சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''வீண் செலவுன்னு புலம்புறாங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.''பல்வேறு துறைகளின் தணிக்கை ஆய்வாளர் பதவிக்கு, 811 பேரை சமீபத்துல, டி.என்.பி.எஸ்.சி., வாயிலா தேர்வு செஞ்சிருக்காங்க... இவங்களுக்கு துறை ரீதியா பணியாற்றுவது குறித்த பாடங்களை அரசு பயிற்சி மையத்தில் சொல்லி குடுத்து, 'டிப்ளமா' சான்றிதழும் தருவாங்க...''போன வருஷம் வரைக்கும், தமிழகம் முழுக்க இருக்கிற, 27 அரசு பயிற்சி மையங்கள்ல பயிற்சி வழங்கி, சான்றிதழும் தந்தாங்க... ஆனா, இந்த வருஷம் தனியார் மையத்துல பயிற்சி வழங்க, நிதித்துறையின் உயர் அதிகாரி ஏற்பாடு பண்ணிட்டாரு... இதனால, அரசுக்கு, 4 கோடி ரூபாய் வரை செலவாகியிருக்குதுங்க...''உயர் அதிகாரி, தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளை ஒருமையில தான் கூப்பிடுவாராம்... விடுமுறை நாட்கள்லயும், 'கூகுள் மீட்'ல ஆலோசனை நடத்தி, திட்டுறாருங்க... பெண் ஊழியர்களை ராத்திரி, 9:00 மணி வரைக்கும் வேலை பார்க்க வைக்கிறதால, அவங்க கடும் மன உளைச்சல்ல இருக்காங்க...''அதே நேரம், 'உயர் அதிகாரி நல்ல திறமையானவர் என்பதால, அவருக்கு அறிவுரை வழங்கி திருத்தணும்'னு, முதல்வருக்கு நெருக்கமான, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடம், பாதிக்கப்பட்டவங்க கோரிக்கை வச்சிருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.பேச்சு கச்சேரி முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.