உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / கோவில் சொத்தை விற்றவருக்கு அதே இடத்தில் பணி!

கோவில் சொத்தை விற்றவருக்கு அதே இடத்தில் பணி!

இ ஞ்சி டீயை உறிஞ்சியபடியே, “ஆளை விடுங்கன்னு அலறாத குறையா சொல்றாங்க...” என, பெஞ்ச் அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி. “யாருப்பா அது...” என கேட்டார், அன்வர்பாய். “திருநெல்வேலி மாநகராட்சியின் நாலு மண்டலங்கள்லயும், உதவி கமிஷனர்களா வருவாய்த் துறை அதிகாரிகளை நியமிக்கிறாங்க... இவங்களிடம், 'கோடிக்கணக்கு மதிப்புள்ள வீட்டு மனைகள், வணிக கட்டட அனுமதிக்கு நீங்க நேர்ல போய் ஆய்வு பண்ண வேண்டாம்... கையெழுத்தை மட்டும் போட்டு அனுப்புங்க... மத்ததை நாங்க பார்த்துக்கிறோம்'னு மாநகராட்சியின், 'தல' சொல்றாருங்க... “ஏற்கனவே, இந்த மாநகராட்சியில் பினாயில் கொள்முதல் மற்றும், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்கள்ல ஊழல் பண்ணி, நாலஞ்சு அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' ஆகியிருக்காங்க... இதனால, உதவி கமிஷனர்கள் எல்லாம், 'கையெழுத்தை போட்டுட்டு, நாளைக்கு நாம மாட்டிக்கவா'ன்னு தயங்குறாங்க... ஒரு பெண் அதிகாரி, 'ஆளை விடுங்க... நான் வருவாய்த் துறைக்கே போயிடுறேன்'னு கண்ணீர் விடாத குறையா புலம்புறாங்க...” என்றார், அந்தோணிசாமி. “ராமகிருஷ்ணன், இதையும் கேட்டுட்டு கிளம்புங்க...” என, நண்பரை இழுத்து பிடித்த அன்வர்பாயே, “காசு வாங்கினாலும், காரியத்தை கச்சிதமா முடிச்சு குடுத்துடுறாரு பா...” என்றபடியே தொடர்ந்தார்... “மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அரசு போக்குவரத்து கழக டிப்போவுல, ஆளுங்கட்சி தொழிற்சங்க நிர்வாகி ஒருத்தர் இருக்கார்... கை நீட்டி காசு வாங்கிட்டா, வாக்கு தவற மாட்டாரு பா... “டிரைவர்கள், கண்டக்டர்கள் இடமாறுதல் அல்லது, 'ரூட்' மாறுதல் கேட்டா, தட்டாம பண்ணி குடுத்துடுவாரு... அதுக்கு ஏத்தபடி, 'சர்வீஸ் சார்ஜ்' வாங்கிடுவாரு பா... “பணத்தை கையில் வாங்கியதுமே, 'இந்த தேதியில உன் கையில ஆர்டர் காப்பி இருக்கும்'னு சொல்வாரு... அதே மாதிரி, ஆர்டரை வாங்கி குடுத்துடுவாரு... 'போக்குவரத்துத் துறையின் மண்டல அதிகாரிகள் வரைக்கும் இவருக்கு செல்வாக்கு இருக்கிறதால, 'மணி' அடிச்ச மாதிரி நடந்துக்கிறார்'னு ஊழியர்கள் சொல்றாங்க பா...” என்றார், அன்வர்பாய். “கோவில் சொத்தை வித்தவருக்கு, அதே கோவில்ல வேலை தந்திருக்கா ஓய்...” என்றார், குப்பண்ணா. “எங்கவே இந்த அநியாயம்...” என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. “காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில்ல எழுத்தரா இருந்த ஒருத்தர், கோவிலுக்கு சொந்தமான இடத்தை, 20 லட்சம் ரூபாய், 'கட்டிங்' வாங்கிட்டு, பொது ஏலம் என்ற பெயர்ல வித்துட்டார்... இதை கேள்விப்பட்டு கொதிச்சு போன பக்தர்கள், மாவட்ட தி.மு.க., செயலரிடம் புகார் சொல்லியிருக்கா ஓய்... “அவர் தலையிட்டதால, சம்பந்தப்பட்ட எழுத்தரை, சென்னை சூளையில் இருக்கற அங்காளம்மன் கோவிலுக்கு துாக்கி அடிச்சா... ஆனா, பல மாதங்களா அங்க போய், 'ஜாயின்' பண்ணாத அவர், மறுபடியும் கச்சபேஸ்வரர் கோவில்லயே வேலை பார்க்க முயற்சி பண்ணிண்டு இருந்தார் ஓய்... “இந்த சூழல்ல, சமீபத்துல துறையின் முக்கிய புள்ளி கோவிலுக்கு ஆய்வுக்கு வந்திருக்கார்... அவரை எப்படியோ தாஜா பண்ணி, மறுபடியும் கச்சபேஸ்வரர் கோவில்ல சேர்ந்துட்டார்... இது, பக்தர்கள் மத்தியில அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு ஓய்...” என முடித்தார், குப்பண்ணா. “சுரேஷ், தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்கு போயிருந்த உங்க மகன் வந்துட்டானா...?” என, நண்பரிடம் அந்தோணிசாமி விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
அக் 23, 2025 18:31

20 லட்சத்துக்கு விற்று பெற்றதில் கொஞ்சம் கிள்ளிக்கொடுத்தால் எந்தப் ‘பெருந் தலையும் ‘’ தானாகவே ஆடுமே திரும்பி வந்தவர் நாளை கோயிலையும், சாமியையும் பொது ஏலத்தில் விற்றுவிடுவார்


S.V.Srinivasan
அக் 23, 2025 09:01

திராவிட மாடல் ஆட்சில தலை முதல் வால் வரை லஞ்சமும் அராஜகமும்தான் போல இருக்கே.


சமீபத்திய செய்தி