உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / அமைச்சர் கூட்டத்தை புறக்கணித்த ஆளுங்கட்சி புள்ளி!

அமைச்சர் கூட்டத்தை புறக்கணித்த ஆளுங்கட்சி புள்ளி!

ப ட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, “எந்த உள்ளாட்சி அமைப்புகளும் மதிக்கலைங்க...” என, பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி. “எந்த உத்தரவை சொல்றீர் ஓய்...” என கேட்டார், குப்பண்ணா. “தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் தொழில் உரிம விதிகள், 2023ன்படி, அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள்ல, தமிழில் பெயர் பலகை அமைக்கணும்... அதா வது, 5:3:2 என்ற அளவி ல் முறையே, தமிழ், ஆங்கிலம், பிற மொழியில் பெயர் இருக்கணும்... “இந்த சட்டத்தை போட்டு வருஷம் ரெண்டாகியும், எந்த உள்ளாட்சி அமைப்பிலும், தமிழில் பெயர் பலகை வைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கலைங்க... “உள்ளாட்சி அமைப்புகள்ல பெரும்பாலும், ஆளுங்கட்சியினரே தலைமை பதவியில் இருக்கிறதால, அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க முற்பட்டாலும், அவங்களை தடுத்துடுறாங்க... 'தமிழை பாதுகாப்போம்னு மேடையில முழங்குனா மட்டும் போதுமா... செயல்ல காட்ட வேண்டாமா'ன்னு தமிழார்வம் உள்ள அதிகாரிகள் பலரும் புலம்புறாங்க...” என்றார், அந்தோணிசாமி. “சமைக்கற பாத்திரங்களை எட்டி உதைக்கறார் ஓய்...” என்றார், குப்பண்ணா. “அடப்பாவமே... யாருவே அது...” என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. “சென்னைக்கு பக்கத்துல இருக்கற மாவட்டத்தில், சத்துணவு திட்டத்துக்கான கலெக்டரின் பி.ஏ.,வா இருக்கறவரை தான் சொல்றேன்... அரசு பள்ளிகளுக்கு அடிக்கடி ஆய்வுக்கு போறவர், 'என்ன சமையல் பண்றீங்க... சுத்தமா வச்சுக்க மாட்டேளா'ன்னு கேட்டு, சமையல் பாத்திரங்களை காலால் எட்டி உதைக்கறார் ஓய்... “அதுவும் இல்லாம, சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டும் ஊழியர்களை, 'டார்ச்சர்' பண்றார்... பெண் பணியாளர்களிடம், 'டபுள் மீனிங்'ல வேற பேசறவர், 'எல்லா ரிஜிஸ்டர்களையும் கலெக்டர் ஆபீசுக்கு எடுத்துட்டு வாங்கோ'ன்னு சொல்லிண்டு, 'பஞ்சா' பறந்து போயிடறார்... இதனால, சத்துணவு ஊழியர்கள் எல்லாம் மன உளைச்சல்ல தவிக்கறா ஓய்...” என்றார், குப்பண்ணா. “அமைச்சர் கூட்டத்தை புறக்கணிச்சுட்டாரு வே...” என்றார், அண்ணாச்சி. “யாருப்பா அது...” என கேட்டார், அன்வர்பாய். “விருதுநகரில், 6.80 கோடி ரூபாய் செலவில், அரசு அருங்காட்சியகம் கட்டிட்டு இருக்காவ... 2024 பிப்., 24ல் துவங்கிய கட்டுமான பணிகளை, 2025 ஆக., 25ல் முடிக்கணும்னு ஒப்பந்தம் போட்டிருக்கு வே... “ஆனா, இப்ப வரை, 50 சதவீதம் பணிகள் தான் முடிஞ்சிருக்கு... சமீபத்துல, கட்டுமான பணிகளை ஆய்வு செய்த மாவட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, 'எப்ப பணிகள் முடியும்'னு கேட்டதுக்கு, அதிகாரிகள், 'மூணு மாசத்துல முடியும்'னு பதில் தந்திருக்காவ வே... “உடனே அமைச்சர், 'நீங்க கட்டி முடிக்கும் வரை திறப்பு விழாவுக்கு முதல்வர் காத்திருப்பாரா... சீக்கிரமா முடிக்கிற வழியை பாருங்க'ன்னு கண்டிச்சிருக்காரு... இந்த பணிகளை டெண்டர் எடுத்து செய்றது, விருதுநகர் தொகுதி தி.மு.க., புள்ளிக்கு வேண்டியவராம்... “இதனால, அமைச்சர் மேல அவருக்கு அதிருப்தி... அன்னைக்கு சாயந்தரம் குடிநீர் விநியோகம் சம்பந்தமா அமைச்சர் நடத்திய ஆய்வு கூட்டத்தை, விருதுநகர் புள்ளி புறக்கணிச்சிட்டாரு வே... “அதுவும் இல்லாம, 'விருதுநகர்ல நடக்கிற எந்த அரசு கட்டுமானங்களா இருந்தாலும், அது சம்பந்தமான பைல்கள் எல்லாம் தொகுதி புள்ளி டேபிளுக்கு போயிட்டு தான் வருது'ன்னு அதிகாரிகள் புலம்புதாவ வே...” என முடித்தார், அண்ணாச்சி. “சீனிவாசன், இப்படி உட்காரும்...” என, நண்பருக்கு இடம் தந்தபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !