டீக்கடை, பெஞ்ச் இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''துப்பாக்கியை காட்டி மிரட்டியிருக்காருங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.''யாருவே அது...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியில், வடசென்னை மத்திய தெற்கு மாவட்ட செயலரா கிருஷ்ணமூர்த்தின்னு ஒருத்தர் இருக்காருங்க... இந்த அணியின் ராயபுரம் பகுதி செயலரா இருந்த அறிவழகனை, சமீபத்துல பதவியை விட்டு துாக்கிட்டாருங்க...''இதனால, ரெண்டு பேருக்கும் தகராறு ஆகி, பரஸ்பரம் போலீஸ்ல புகார் குடுத்து, விசாரணை நடக்குது... இதுக்கு மத்தியில, தனக்கு மாவட்ட செயலர் பதவி தர்றதா, 6 லட்சம் ரூபாயை வாங்கிட்டு கிருஷ்ணமூர்த்தி ஏமாத்திட்டாரு... ''இது பத்தி அவரிடம் கேட்கப் போனப்ப, துப்பாக்கியை காட்டி சுட்டுருவேன்னு மிரட்டியதா, முதல்வரின் தனிப்பிரிவுக்கு அறிவழகன் புகார் அனுப்பிட்டாருங்க... இது சம்பந்தமா, புளியந்தோப்பு துணை கமிஷனர் விசாரிக்கிறாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.''பன்னீர்செல்வம் அணியிலும், பதவிக்கு அடிச்சுக்கிறாங்கன்னா ஆச்சரியம் தான் பா...'' என்ற அன்வர்பாயே, ''மாநகராட்சி அதிகாரிகளிடம் மிரட்டல் வசூல் நடக்குது பா...'' என்றார்.''எந்த ஊர்ல ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''முதல்வர் ஸ்டாலின், வர்ற பிப்., 6 மற்றும் 7ம் தேதிகள்ல, திருநெல்வேலியில் நடக்கும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள்ல கலந்துக்க இருக்காரு... இந்த நிகழ்ச்சிகளின் செலவுக்காக, மாநகராட்சி இன்ஜினியர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளிடம், தலா 1 லட்சம் ரூபாயை பாளையங்கோட்டை தொகுதி புள்ளி கேட்டிருக்காரு பா...''யாராவது தர மறுத்தா, இடமாற்றம் பண்ணிடுவோம்னு நகராட்சி நிர்வாகத் துறையின் முக்கியப் புள்ளி பெயரை பயன்படுத்தி மிரட்டுறாருங்க... இதுக்கு பயந்து, 'ஸ்மார்ட் சிட்டி' முக்கிய அதிகாரி ஒருத்தர் வசூல் பண்ணி குடுத்துட்டாரு பா...''போன மாசம், கன்னியாகுமரி வள்ளுவர் சிலை வெள்ளி விழாவுக்கு நெல்லை வழியா முதல்வர் போனாரே... அப்பவும், முதல்வர் வரவேற்பு நிகழ்ச்சி செலவுக்குன்னு வசூல் செஞ்சாங்க... இப்படிஅடிக்கடி, துறை முக்கியப் புள்ளியின் பெயரை பயன்படுத்தி பணம் கேட்கிறதால, மாநகராட்சி அதிகாரிகள் நொந்து போயிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''கான்ட்ராக்டர் தேர்வுக்கு கடிவாளம் போட்டுட்டாவ வே...'' என்ற, பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''தமிழகத்தில், மணல் குவாரிகள்ல முறைகேடுகள் நடக்கிறது அமலாக்கத் துறையால் அம்பலமாச்சுல்லா... இதுல சம்பந்தப்பட்ட குவாரிகள் இப்ப முடங்கி கிடக்கு வே...''இந்த குவாரிகள்ல மணல் எடுக்கிற கான்ட்ராக்டர்களா இருந்தவங்க, துறையின் முக்கியப் புள்ளிக்கு நெருக்கமா இருந்தாவ... இந்த சூழல்ல, புதுசா பல்வேறு மாவட்டங்கள்ல மணல் குவாரி திறக்கும் பணிகள் நடக்கு வே...''இதுலயும் மணல் எடுக்கிற டெண்டரை, அதே கான்ட்ராக்டர் எடுக்க, முக்கியப் புள்ளி ஆசியுடன் முயற்சி பண்ணியிருக்காங்க... ஆனா, மறுபடியும் பிரச்னைகள் வந்துடக் கூடாதுன்னு, முதல்வர்அலுவலகம் கறாரா இருக்கு வே...''அந்த வகையில், 'மணல் எடுக்கிற கான்ட்ராக்டர்களை, அந்தந்த மாவட்ட கலெக்டர்களே தேர்வு செய்யட்டும்'னு மேலிடத்துல இருந்து உத்தரவு போட்டுட்டாவ... இதனால, முக்கியப் புள்ளி, 'சைலன்ட்' ஆகிட்டாரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.பேச்சு முடிய பெரியவர்கள் கிளம்பினர்.