“இன்னும் பயணப்படி வராம புலம்புறாங்க... ” என்றபடியே, நண்பர்கள் நடுவில் அமர்ந்தார் அந்தோணிசாமி. “யாருக்கு வே...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி. “தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் உளவு பணிகள்ல நிறைய போலீசார் ஈடுபட்டாங்க... இதுக்காக, அவங்களுக்கு வழக்கமா பயணப்படி தருவாங்க... “தேர்தல் முடிஞ்சு, புதிய அரசு பொறுப்புக்கு வந்து ரெண்டு மாசமாகிடுச்சு... ஆனாலும், தேர்தல் பணிகள்ல ஈடுபட்ட போலீசாருக்கு இன்னும் பய ணப்படி வரலைங்க... “ஒவ்வொரு போலீசாருக்கும் அவங்களது பதவிக்கு ஏற்றபடி, 5,000த்துல இருந்து 8,000 ரூபாய் வரைக்கும் பயணப்படி வரும்... இது இன்னும் வராததால, அப்பணிகளில் ஈடுபட்ட போலீசார் எல்லாம் விரக்தியில இருக்காங்க...” என்றார் அந்தோணிசாமி. “கிட்டத்தட்ட, எட்டு வருஷங்களுக்கு மேலா பெஞ்ச தேய்ச்சுண்டு இருக்கா ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்... “சென்னையை ஒட்டியிருக்கற செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்ல சில வருவாய் கிராமங்களை பிரிச்சு, 2018ல் சென்னை மாவட்டத்துல சேர்த்தா... பொதுவா, வி.ஏ.ஓ., அதிகபட்சம் ஒரு வருஷம் தான் அந்த கிராமத்துல இருக்கணும் ஓய்... “அப்புறம், வேற கிராமத்துக்கு அவரை மாத்தணும்கறது விதி... ஆனா, சென்னையுடன் இணைக்கப்பட்ட பல கிராமங்களின் வி.ஏ.ஓ.,க்கள் பலர், எட்டு வருஷங்களா அதே கிராமங்கள்ல பணியில இருக்கா ஓய்... “எந்த சான்றிதழ் வாங்கணும்னாலும் இவாளுக்கு, 'கப்பம்' கட்டினா தான் காரியம் நடக்கும்... யாராவது கப்பம் தர மறுத்தா, அவாளுக்கு தர்ற சான்றிதழ்கள்ல பெயர், முகவரியை தப்பு தப்பா குறிப்பிட்டு, அவாளை நோகடிக்கறா ஓய்... “இது பத்தி நிறைய புகார்கள் வரவே, போன வருஷம் கவுன்சிலிங் நடத்தி, இவாளுக்கு இடமாறுதல் போடும்படி சென்னை கலெக்டர் உத்தரவு போட்டார்... உடனே ஒரு சில வி.ஏ.ஓ.,க்களை மட்டும், அந்தந்த கோட்டங்கள்ல இடமாறுதல் செய்தா ஓய்... “ஆனா, நிறைய தாலுகாக்கள்ல கலெக்டர் உத்தரவை யாருமே கண்டுக்கல... இப்ப, 'சென்னைக்கு புது கலெக்டரா வந்திருக்கற மாலதி ஹெலன், வி.ஏ.ஓ.,க்களை எல்லாம் கூண்டோடு மாத்தணும்'னு பொதுமக்கள் சொல்றா ஓய்...” என்றார் குப்பண்ணா. “அங்கீகாரமே இல்லாம ஆட்டம் போ ட ஆரம்பிச்சிட்டாவ வே... ” என்றார் பெரியசாமி அண்ணாச்சி. “யாருப்பா அது...” என கேட்டார் அன்வர்பாய். “சென்னை, நந்தனத்துல தமிழக வீட்டுவசதி வாரியத்தின் தலைமை அலுவலகம் இருக்குல்லா... இங்க, த.வெ.க., தொழிற்சங்க நிர்வாகிகள் ரெண்டு பேர், இரட்டை குழல் துப்பாக்கிகளா செயல்படுதாவ வே... “வாரிய அதிகாரிகளிடம் தங்களுடைய கெத்தை காட்டி, மிரட்டி பல காரியங்களை சாதிக்காவ... இத்தனைக்கும் இந்த ரெண்டு பேரும், வாரியத்துல டிரைவர் மற்றும், 'கிளர்க்' பதவிகள்ல தான் இருக்காவ வே... “ஆனாலும், ஆளுங்கட்சி தொழிற்சங்கம் என்ற போர்வையில் அதிகாரிகளை எல்லாம் சர்வசாதாரணமா பார்த்து பேசுதாவ... 'ஆளுங்கட்சி சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வமா தொழிற்சங்கமே துவங்கல... அதுக்குள்ள இவங்க அக்கப்போர் தாங்க முடியலையே'ன்னு வாரிய அதிகாரிகள் எல்லாம் புலம்புதாவ வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி. “வில்லியம்ஸ், நாகேந்திரன் இப்படி உட்காருங்க...” என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.