அரசு பஸ் கண்ணாடியை உடைத்து ஓட்டுநரை தாக்கிய இருவர் கைது
கோயம்பேடு, மதுரவாயல் கங்கையம்மன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 45; அரசு பேருந்து ஓட்டுநர். கடந்த 18 ம் தேதி அதிகாலை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிதம்பரத்திற்கு செல்லும் பேருந்தை ஓட்டி சென்றார். கோயம்பேடு மேம்பாலம் அருகே திரும்பியபோது, பேருந்துக்கு வழி விடாமல் இருவர் தாறுமாறாக இருசக்கர வாகனத்தில் சென்றனர். அவர்களை, பேருந்து ஓட்டுநர் கண்டித்தார்.இதனால் ஆத்திரமடைந்த இருவரும், பேருந்தின்முன் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தினார். பின், ஓட்டுநர் பாலகிருஷ்ணனை ஆபாசமாக திட்டியதுடன், பேருந்தில் இருந்து அவரை கீழே இறக்கி தாக்கினர். கீழே கிடந்த செங்கல்லால் பேருந்தின் முன் பக்க கண்ணாடிகளை உடைத்தனர்.இதுகுறித்து, கோயம்பேடு போலீசார் விசாரித்து, அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய, கோயம்பேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த தினேஷ்,24; சேமாத்தம்மன் நகரை சேர்ந்த சுரேஷ், 24 ஆகிய இருவரை கைது செய்தனர்.தினேஷ் மீது ஏற்கனவே அடி தடி வழக்குகள் உள்ளன.