பில்டர் காபியை பருகியபடியே, ''கல்வி அதிகாரி மீது கடுப்புல இருக்கா ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''துாத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரா இருக்கறவர், கணேஷ் மூர்த்தி... இவர், சமீபத்தில் முடிவைத்தானேந்தல் என்ற ஊர்ல இருக்கற அரசு மேல்நிலை பள்ளியில் ஆய்வுக்கு போயிருந்தார் ஓய்...''அப்ப, பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை ஒருமையில பேசியதும் இல்லாம, தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியும் திட்டியிருக்கார்... 'கல்வி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கணும்'னு ஆசிரியர்கள் தரப்புல, உயர் அதிகாரிகளிடம் புகார் குடுத்திருக்கா... 'நடவடிக்கை எடுக்கலன்னா, ஆசிரியர் சங்கங்களை ஒருங்கிணைத்து, தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்'னும் எச்சரிக்கை பண்ணியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''மூடி மறைச்சிடுறாருங்க...'' என்ற அந்தோணி சாமியே தொடர்ந்தார்...''திருப்பூர் மாவட்டம், அவிநாசி போலீஸ் ஸ்டேஷன்ல எஸ்.பி., தனிப்பிரிவு ஏட்டா ஒருத்தர் இருக்காரு... ஸ்டேஷன் எல்லைக்குள் நடக்கும் குற்றங்கள், போராட்டம், ஆர்ப்பாட்டம், போக்சோ வழக்குகள், ஸ்டேஷன் கட்டப்பஞ்சாயத்து, சட்டவிரோத செயல்களை கண்காணிச்சு, எஸ்.பி.,க்கு தகவல் தர்றது தான் இவரது வேலைங்க...''ஆனா, ஒரு சில உப்பு சப்பில்லாத விஷயங்களை மட்டும் எஸ்.பி.,க்கு தெரிவிச்சுட்டு, வருமானம் வரக்கூடிய பல விவகாரங்களை மூடி மறைச்சிடுறாருங்க...''சமீபத்துல, ஒரு பனியன் கம்பெனியில், 18 வயதுக்கு உட்பட்ட ரெண்டு சகோதரிகளை, கம்பெனி உரிமையாளர் பலாத்காரம் பண்ணிட்டதா புகார் வந்துச்சு... இந்த விஷயத்தை எஸ்.பி.,க்கு தெரிவிக்காம ஏட்டு மறைச்சிட்டாருங்க...''இந்த விபரத்தை பைசல் பண்ண பல லட்சங்கள் கைமாறியிருக்குது... இதுக்கு ஒரு பெண் போலீஸ் அதிகாரியும் உடந்தையா இருந்திருக்காங்க... ஏட்டுக்கும் கணிசமான தொகை தேறிடுச்சுங்க...'' என்றார், அந்தோணிசாமி.''அருள்முருகன், தள்ளி உட்காரும்...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே, ''லஞ்சம், ஊழல் இல்லாத நிர்வாகம் என்ற முழக்கத்துக்கு வேட்டு வச்சிட்டாரு வே...'' என்றார்.''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.''தமிழக வெற்றிக் கழகம் கட்சியை நடத்துற நடிகர் விஜய், 'லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம்'னு அடிக்கடி முழங்குதாரே... ஆனா, அவரது கட்சி நிர்வாகியே, அதை காதுல போட்டுக்கல வே...''சென்னை, ஆயிரம்விளக்கு, தி.நகர் ஆகிய இரு சட்டசபை தொகுதிகள் அடங்கிய மாவட்டத்தின் செயலர், கட்சியின் பொதுச்செயலர் ஆனந்துக்கு வேண்டி யவர்... இவர், தன் மாவட்டத்துல பகுதி, வட்ட அளவிலான பதவிகளுக்கு வசூல் வேட்டை நடத்தி தான், நிர்வாகிகளை நியமிச்சிருக்காரு வே...''இதனால, 10 விரல்கள்லயும் மோதிரம், பிரேஸ்லெட்னு நடமாடும் நகை கடையாகவே வலம் வர்றாரு... 'என்கிட்ட பணம் குடுத்து தான் பதவி வாங்குனோம்னு வெளியில சொன்னா, ஆனந்திடம் சொல்லி உங்க பதவியை பறிச்சிடுவேன்'னும் மிரட்டுதாரு வே...''அது மட்டும் இல்லாம, சென்னையில மாவட்ட செயலர் நியமிக்கப்படாத தொகுதிகள்ல இருக்கிற கட்சியினரிடமும், 'பொதுச்செயலரிடம் பேசி, உங்களுக்கு பதவி வாங்கி தர்றேன்'னு வசூல் பண்ணுதாரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.''வேல்முருகன் வரார்... பேச பிடிச்சுண்டா விட மாட்டார் ஓய்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.