உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ரோந்து போகாமல் கட்டப்பஞ்சாயத்தில் போலீசார், ‘பிசி!’

ரோந்து போகாமல் கட்டப்பஞ்சாயத்தில் போலீசார், ‘பிசி!’

“இன்னும் என்னவெல்லாம் தில்லுமுல்லுகள் பண்ணியிருக்காவளோ...” என புலம்பியபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி. “நுாலக துறையிலயா ஓய்...” என பட்டென கேட்டார் குப்பண்ணா. “ஆமா... மாவட்ட நுாலக அலுவலர் பணியிடங்களை பொறுத்தவரை, சொந்த மாவட்டத்தில் யாருக்கும் பணி நியமனம் வழங்க மாட்டாவ... பணி ஓய்வுக்கு ஆறு மாசங்களுக்கு முன்னாடி தான், சொந்த மாவட்டத்துல பணி நியமனம் தருவாவ வே... “ஆனா, கடந்த தி.மு.க., ஆட்சியில், 25 மாவட்ட நுாலக அலுவலர்களிடம் பணத்தை வாங்கிட்டு, அவங்க சொந்த மாவட்டங்கள்ல பணி நியமனம் குடுத்திருக்காவ... நுாலகங் களுக்கு வினியோகிக்கப்படும் புத்தகங்களை, ‘பைண்டிங்’ செஞ்சதிலும் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருக்கு வே... “சில புத்தகங்கள்ல பக்கங்களை தலைகீழா கூட வச்சு, ‘பைண்டிங்’ பண்ணி நுாலகங்களுக்கு அனுப்பியிருக்காவ... இதனால, ‘ஒட்டுமொத்த நுாலக துறையிலும் அதிரடி இடமாறுதல்களை செய்யணும்’னு, நேர்மையான ஊழியர்கள் புலம்புதாவ வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி. “நிரந்தர அதிகாரி இல்லாம நிர்வாகமே நடக்கல பா...” என்றார் அன்வர்பாய். “எந்த துறையிலங்க...” என கேட்டார் அந்தோணிசாமி. “தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நல ஆணையத்தில் அளிக்கப்படும் புகார்கள் தொடர்பா, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேர்ல ஆஜராகும்படியோ அல்லது அறிக்கை அளிக்கும் படியோ ஆணையம் உத்தரவு போடும்... இந்த உத்தரவுகள் எல்லாம், ஆணையத்தின் உறுப்பினர் செயலர் வழி யா தான் போகும் பா... “ஆனா, ஆணையத்துக்கு நிரந்தர உறுப்பினர் செயலர் இல்ல... ஆதிதிராவிடர் வீட்டுவசதி கழகத்தின் மேலாண் இயக்குநரான செந்தில்ராஜிடம், உறுப்பினர் செயலர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் பொறுப்புகளை கூடுதலா குடுத்திருக்காங்க பா... “உறுப்பினர் செயலர் பொறுப்பை, செந்தில்ராஜ் ஏற்று ரெண்டு மாசமாகியும், இதுவரை ஆணையம் பக்கமே வரல... பல துறைகளை கவனிக்கிறதால தன்னால நேர்ல வர முடியாதுன்னு சொல்லி, ஆணையத்தின் உத்தரவுகளை, ‘இ – பைலிங்’ முறையில் தனக்கு அனுப்பும்படி சொல்றாரு பா... “சரின்னு அதிகாரிகள் அனுப்பினாலும், அவற்றை பார்த்து உத்தரவுகளை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கிறது இல்ல... இதனால, ஆணையத்தின் பல உத்தரவுகள் உறுப்பினர் செயலர் கையெழுத்தில்லா ம கிடப்புல கிடக்குது பா...” என்றார் அன்வர்பாய். “ரோந்து பணியையே மறந்துட்டா ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்... “திருவள்ளூர் மாவட்டத்துல பிரபல முருகன் கோவில் ஊர்ல டி.எஸ்.பி., அலுவலகம் இருக்கு... இதன் கட்டுப்பாட்டுல ஆறு போலீஸ் ஸ்டேஷன்கள், தலா ஒரு மகளிர் மற்றும் மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன்கள் இருக்கு ஓய்... “இந்த ஸ்டேஷன் போலீசார், சில மாசங்களா இரவு ரோந்து போறதே இல்ல... இதனால, ராத்திரி நேரங்கள்ல கஞ்சா, ‘குட்கா’ கடத்தல் சர்வ சாதாரணமாயிடுத்து... வீடுகள், கடைகளின் பூட்டை உடைத்து திருட்டுகள் அதிகமா நடக்கறது ஓய்... “கடந்த ரெண்டு வாரங்கள்ல மட்டும் இந்த ஏரியாவுல, 60 சவரன் நகைகள், வெள்ளி பொருட்கள், 10 லட்சம் ரூபாய் திருடு போயிருக்கு... ரோந்து போகாம போலீசார் அப்படி என்ன தான் வெட்டி முறிக்கறான்னு பார்த்தா, சில வக்கீல்களுடன் கூட்டணி போட்டு, கட்டப்பஞ்சாயத்து நடத்தி காசு பார்த்துண்டு இருக்கா ஓய்...” என முடித்தார் குப்பண்ணா. பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
நவ 18, 2026 19:43

தனிஷ்க். திருட்டில். அந்த. திருடன். பின்புற. வழியே. சென்று. ஒரே. நிமிஷத்திலா. கொள்ளையடித்திருப்பான்? நகரின். நடுப்பகுதியான. அந்தப்பக்கம் போலீஸ். ரோந்து. சென்றிருந்தால். சிறிதளவாவது. சந்தேகம். வந்து. பார்க்க. தோன்றியிருக்கும் திருவள்ளூர் மட்டும். இப்படி. இல்லை


pachaiyappan S
நவ 18, 2026 18:06

வாங்கிய பழகிய கை


வில்லிபுத்தூரான்
நவ 18, 2026 09:21

நாங்க பணிக்கு வந்தது சம்பாதிக்கத் தான்.ரோந்து போகவோ பாதுகாப்பு கொடுக்கவோ அல்ல டீக்கடைப் பெரிசுகளுக்கு இத யாராவது சொல்லுங்...சார்.


முக்கிய வீடியோ