உள்ளூர் செய்திகள்

அறிவியல் துளிகள்

01. பின்லாந்தில் உள்ள துர்கு பல்கலை, அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலையுடன் இணைந்து, இதய செயலிழப்பைக் கண்டுபிடிக்கின்ற சென்சார்களுடன் இணைந்து இயங்கும் செல்போன் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. 1,003 நபர்களை வைத்துச் சோதனை செய்ததில் இந்தச் செயலி, 85 சதவீதம் சரியாக இதய செயலிழப்பைக் கண்டறிந்தது.

02. கொம்புச்சா எனப்படும் நொதிக்கப்பட்ட டீ பானம் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்று ஏற்கனவே அறியப்பட்டிருந்தது. தற்போது இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை நீக்குவதாக அமெரிக்காவின் வட கரொலினா பல்கலை கண்டறிந்துள்ளது. 03. கண் பார்வை இல்லாதவர்கள் சூரிய கிரகணத்தைக் கண்டு உணர முடியாது என்பதால் அவர்கள் கேட்டு உணரும் வகையில் ஒரு கருவியை கேம்பிரிட்ஜ் பல்கலை உருவாக்கியுள்ளது. 'லைட்சவுண்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கருவி சூரிய ஒளி அலைகளை இசை ஒலி அலைகளாக மாற்றுகிறது. 04. எதிர்காலத்தில் நிலவு, விண்கற்கள் முதலிய குறைந்த ஈர்ப்பு விசை உள்ள விண்பொருட்களில் ஆய்வு செய்வதற்காக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சூரிச் பல்கலை விஞ்ஞானிகள் மூன்று கால் ரோபோவை உருவாக்கியுள்ளனர். அடிப்படையான சோதனைகளில் இதில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 05. பேஸ்மேக்கர் முதலிய சில கருவிகளை உடலில் பொருத்தும் போது அவை தொடர்ந்து இயங்க பேட்டரி மாற்ற வேண்டும். அதற்காக அவற்றை உடலிலிருந்து வெளியே எடுக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். இதைத் தவிர்ப்பதற்காக சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு உடலில் உள்ள பிராணவாயுவைக் கொண்டு சார்ஜ் செய்து கொள்ளும் பேட்டரியை வடிவமைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !