உள்ளூர் செய்திகள்

வலையில் ஒரு இதயம்! (12)

முன்கதை: கல்லுாரியில் மாணவன் விக்ரம் மிரட்டலால், பாதிக்கப்பட்ட மாணவி ஸ்ருதி, மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தாள்; பெங்களூரு மாலில் சினிமா பார்த்த போது நடந்த சம்பவங்களை பற்றி மருத்துவரிடம் மனம் திறந்தாள். இனி - சினிமா இடைவேளையின் போது, பாப்கார்ன் வாங்க போனான் விக்ரம். அவனுடன் செல்ல எத்தனித்த ஸ்ருதியை பிடித்து உட்கார வைத்தாள் ஒரு பெண். அது, அவளுடன் படிக்கும் மகாலட்சுமி. விக்ரமின் மோசமான குணங்களை அவள் ஆதாரப்பூர்வமாக கூறினாள். அதை கேட்டு ஸ்ருதிக்கு தலைசுற்றியது. மனம் நம்ப மறுத்தது. அறைக்கு திரும்பியதும் பூர்ணாவிடம் விஷயத்தை கூறினாள். விக்ரம் நல்ல பண்பில்லாதவன் என்பதை உறுதிபடுத்தி, 'மனதை குழப்பாதே; நாளைக்கு பார்த்துக்கலாம்...' என, இரவு உடைக்கு மாறினாள் பூர்ணா. துாக்கமின்றி தவித்தாள் ஸ்ருதி. மறுநாள் விக்ரமின் வகுப்பு தோழன் ராஜாவை சந்தித்தாள்; விக்ரம் பற்றி அறிந்தவற்றை விசாரித்தாள். 'பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவன்; படிச்சு முடிச்சு வேலைக்கு போகணும்ன்னு அவசியம் இல்லை... பொண்ணுங்க கூட சுத்துறது; தண்ணியடிக்கிறது தான் அவன் பொழுதுபோக்கு... எதிர்த்து கேட்டா அசிங்கப்படுத்துவான்... அவன விட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகி வந்துடு...' என்றான் ராஜா. மறுநாள் -வகுப்புக்கு புறப்பட்டு கொண்டிருந்த ஸ்ருதியிடம், 'முகநுால் பக்கத்துல, நீ ராஜாவோட இருக்கிற புகைப்படத்தை போட்டிருக்கிறான் விக்ரம்...' என்றாள் பூர்ணா.அடக்க இயலாத அழுகையுடன் அறைக்குள் முடங்கி விட்டாள் ஸ்ருதி. பூர்ணா டில்லி போய்விட்டதால், தனிமையில் இருந்தாள்; மன உளைச்சல் அதிகமானது.அன்று, 'கேன்டீனுக்கு வா...' என போனில் அழைத்தான் விக்ரம்.மறுத்தவளிடம், 'வரலைன்னா... என்னோட நீ இருக்கிற புகைப்படங்கள உங்க அம்மாக்கு அனுப்பிடுவேன்...' என மிரட்டினான்.உடம்பெல்லாம் நடுங்கியது. 'பிரச்னையை தீர்க்க அத்தை ப்ரியாதான் சரியான நபர்' என யோசித்தபடி, அலைபேசியில் தொடர்பு கொண்டாள். குரல் வித்தியாசத்தை உணர்ந்த ப்ரியா, விவரங்களை அறிந்து தேற்றினார்.அன்று நிம்மதியாக துாங்கினாள் ஸ்ருதி. மறுநாளும் அலைபேசியில் அழைத்து, 'புகைப்படம் எல்லாத்தையும் வாட்ஸ் ஆப்ல உங்க அம்மாவுக்கு அனுப்பிட்டேன்...' என வக்கிரம் காட்டிய விக்ரம், வற்புறுத்தி கேன்டீனுக்கு அழைத்தான்.மாலை 3:30 மணி -எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலுடன் கேன்டீனுக்கு வந்தாள் ஸ்ருதி.குரூரம் கொப்பளிக்க, 'இந்த நேரம் பிருந்தாவன் ரயில் வந்திருக்கும்; அதில் உங்கம்மாவும் வந்திருப்பாங்க... இப்போ, எங்க இருக்காங்கன்னு கேட்கலாமா...' என்றபடி அலைபேசியில் எண்களை அழுத்தினான். அருகிலேயே, ஒரு அலைபேசி 'ரிங்டோன்' ஒலி கேட்டதும் திரும்பி பார்த்தான். இளமையாய் நெருங்கி வந்த பெண்ணைக் கண்டு அதிர்ந்தான். புரியாமல் நின்றவனிடம், 'ஷாக் ஆயிட்ட இல்ல...' என நக்கல் செய்தாள் ஸ்ருதி.குழம்பியவனிடம், 'ஓரியன் மால்ல சினிமா பாக்கப் போனப்ப, அம்மாவுக்கு குறுஞ்செய்தி போடுன்னு சொல்லி நான் தந்த நம்பருக்கு நீ குறுஞ்செய்தி அனுப்பியிருக்க... அது என் அம்மா எண் இல்ல... என் அத்தை ப்ரியாவுடையது...' என்றாள்.சலனமில்லாமல், 'ஹாய் விக்ரம்...' என கையை நீட்டினார் ப்ரியா. அனிச்சையாய் கை குலுக்கியவனிடம், 'எங்க பொண்ணோட பிரச்னையை சமாளிக்க எங்களுக்கு தெரியும்; இப்போ உன் பிரச்னை என்னன்னு கூறு...' என்றார் ப்ரியா. மிரண்டு முழித்தபடி எழுந்தவனிடம், 'உன் விளையாட்டை இதோட நிறுத்திக்க... இதுக்கு மேல, எதாவது செய்த...' எச்சரிக்கும் தொனியில் விக்ரம் அருகில் சென்று ஒரு செல்பி எடுத்தபடி, 'இதையும் முகநுால்ல போட்டுக்கோ...' என்றார்.எதுவும் சொல்லாமல் நழுவி ஓடினான் விக்ரம்.ஸ்ருதியுடன் சென்னை திரும்பினார் ப்ரியா. ரயில் பயணத்தில் எளிய அறிவுரைகள் சொன்னார்.சென்னை வந்தது ரயில். ஸ்ருதியின் நினைவு கலைந்தது.எதிரே புன்னகையுடன் மருத்துவர் அருணா.''மன்னிச்சிடுங்க டாக்டர்... கல்லுாரி நினைவுகளில் ஆழ்ந்து போயிட்டேன்...'' தண்ணீர் குடித்து ஆசுவாசமான பின், ''எல்லாத்துக்கும் காரணம் என் பயமும், நம்பிக்கை இன்மையும் தான்...'' என்றாள் ஸ்ருதி.''விக்ரம் திரும்ப மிரட்டினா என்ன செய்வ...'' ''போடா... உன்னால் ஆனத பாத்துக்கோன்னு கூறுவேன்...'' சிரித்தாள்.அப்போது, மருத்துவர் அறைக்குள் வந்தார் அம்மா சுகந்தி. ஆச்சரியமாக பார்த்தாள் ஸ்ருதி. இருவருக்கும் அறிவுரை கூறி, ''சரியான புரிதலுடன் பயமின்றி வாழுங்கள்...'' என விடை கொடுத்தார் மருத்துவர்.இருவரும் வெளியே வந்தனர்; கைகளை பற்றியபடி சாலையை கடந்தனர்.முன்பெல்லாம் சாலையைக் கடக்கும் போது கையை பிடித்து இழுக்கும் அம்மா, இப்போது ஆதரவாக பற்றியிருந்ததை கவனித்தாள் ஸ்ருதி. இருவர் முகத்திலும் மெல்லிய புன்னகை இழையோடிக்கொண்டிருந்தது.- முற்றும்.ரவி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !