வாழ்வின் தேவை!
மன்னர் போஜராஜன் ஆட்சியில், நாட்டில் செல்வமும், வளமையும் செழித்தோங்கின. நீதியும், நேர்மையும் நிலை பெற்றிருந்தது. எட்டு லட்சுமிகளும் அரண்மனையில் வீற்றிருந்ததால் எவ்வித குறைவும் ஏற்படவில்லை.ஒரு நாள் -அஷ்ட லட்சுமிகளில் முதன்மையான ஆதிலட்சுமி தோன்றினாள். சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார் மன்னர்.ஆசிர்வதித்தபடி, 'உன் தவப்பயனாக, இத்தனை ஆண்டுகளாக உன் அரண்மனையில் வீற்றிருந்தோம். எவ்வித குறையும் இல்லாதபடி அருள்புரிந்து வந்தோம்... 'காலச்சக்கரம் சுழல்வதால் வேறு இடத்திற்கு பெயர்ந்தாக வேண்டும். அந்நாள் வந்துவிட்டது; இன்று இரவு வரைதான் உன் அரண்மனையில் இருப்போம்...' என்றாள்.'நாளை இங்கு இருக்க மாட்டீர்களா...' 'இருக்க மாட்டோம்... அது காலத்தின் கட்டாயம். எத்தனை பெரிய பாக்கியவானும், அனைத்து ஐஸ்வர்யங்களையும் எப்போதும் பெற்றுக் கொண்டிருக்க முடியாது...''உங்களை வணங்காமல் உண்டதும் இல்லை; உறங்கியதும் இல்லை. நாட்டு மக்கள் நலனுக்காக இங்கு தங்க முடியாதா...' 'அனைத்தையும் அறிவேன்; உன் பக்திக்காக ஒன்றே ஒன்று செய்ய இயலும்...' 'அது என்ன...' 'நாங்கள் எட்டு பேர்... யாரேனும் ஒருவர் வேண்டுமானால், அரண்மனையில் தங்க முடியும். ஒருவரை நீ தேர்ந்தெடுத்து கொள்ளலாம். முடிவு செய்...' என்று கூறினாள் ஆதிலட்சுமி.சிறிதுநேரம் யோசித்தார் போஜராஜன்.'அம்மா... நீங்கள் சென்ற பின், வரும் துன்பம், துயரங்களை தாங்குவதற்கு தேவை தைரியம் மட்டும் தான். அதனால், தைரியலட்சுமி இங்கு தங்க அருள்புரியுங்கள்...' 'அப்படியே ஆகட்டும்...'வேண்டுதலை நிறைவேற்றி மறைந்தாள் ஆதிலட்சுமி.மறுநாள் -அன்பு கனிய பூஜையை முடித்தார் மன்னர்.தைரியலட்சுமி மட்டுமே வீற்றிருப்பாள் என எண்ணியபடி, மனக்கண்ணால் உற்று நோக்கினார் போஜராஜன்.என்ன ஆச்சரியம்!அஷ்டலட்சுமிகளும் வீற்றிருந்தனர்.மனம் பூரித்து, 'அம்மா... இது எப்படி நிகழ்ந்தது....' என நெகிழ்ந்து கேட்டார்.புன்னகை செய்தாள் ஆதிலட்சுமி.'ஒன்று தெரியுமா... தைரியலட்சுமி இருக்கும் இடத்திலேயே, மற்ற ஏழு பேரும் இருக்க வேண்டும் என்பது விதி; அதனால் தான் தங்கிவிட்டோம்; நிரந்தரமாக இங்கேயே இருப்போம்...' என்றாள்.மகிழ்ந்து வணங்கினார் மன்னர்.தளிர்களே... அளப்பரிய செல்வமும், செழிப்பும் பெற்றிருப்பவர் வாழ்விலும், துன்பங்களும், துயரங்களும் வரலாம். அவற்றை எதிர்க்கொள்ளும் தைரியமே முக்கிய தேவை. தைரியம் இருந்தால், துயரங்களை வென்று சிறப்பாக வாழலாம்.என்.ரமேஷ்