வினோத விடுமுறை!
ஐதராபாத் அருகே திருமல்கிரி, சந்தோஷி மாதா பள்ளியில், 1980ல், 5ம் வகுப்பு படித்தபோது, ஒரு நாள், முற்பகல் 11:00 மணிக்கு திடீர் என விடுமுறை அறிவித்தனர். வீட்டிற்குச் சென்ற என்னைப் பார்த்தவுடன் பயம் கலந்த அதிர்ச்சியில், 'ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்தாய்...' என்று கேட்டார் அம்மா.எந்த உணர்வும் இன்றி, 'தலைமை ஆசிரியர் தலைக்கு குளிக்கப் போகிறாராம்; அதனால், விடுமுறை கொடுத்தனர்...' என்றேன்; இதைக் கேட்டு, கடும் கோபம் கொண்டார். மறுநாள் பள்ளிக்கு வந்து, வகுப்பு ஆசிரியரிடம் விசாரித்தார்; நான் கூறியதையே அவரும் கூறியது கேட்டு திகைத்து நின்றார்.உண்மையில், அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் தலைமை ஆசிரியர். நோய் தணிந்து, தலைக்கு தண்ணீர் ஊற்றிய தினம் அது. பள்ளி வளாகம் அருகே வீடு இருந்ததால், மாணவ, மாணவியருக்கு, நோய் தோற்றிவிடாமல் இருக்க, முன் எச்சரிக்கையாக விடுப்பு அறிவித்திருந்தனர். இந்த விவரத்தை விளக்கியதும் சிரித்தபடி திரும்பினார் அம்மா. இப்போது என் வயது, 50; அறியா பருவத்தில் நடந்த அந்த சம்பவம் நினைவுக்கு வரும்போது எல்லாம், வாய்விட்டு சிரித்து விடுகிறேன்.- பிரகாஷ் அர்ஜூன், சென்னை.தொடர்புக்கு: 95512 81433