வியக்க வைக்கும் சிலைகள்!
வியப்பு ஏற்படுத்தும் வண்ணம், உலகம் முழுவதும் பல சிலைகள் அமைந்துள்ளன. அவற்றுக்கு வரலாற்று முக்கியத்துவமும் உண்டு. சில முக்கிய சிலைகள் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.கணபதி!ஆசிய நாடான தாய்லாந்து, சாச்சோயிங்சாவோ நகரில் படுத்த நிலையில் உள்ளது இந்த சிலை. சங்கடங்களை தீர்ப்பதாக நம்பி பிரமாண்டமாக எழுப்பியுள்ளனர். இது, 16 மீட்டர் உயரமும், 22 மீட்டர் அகலமும் கொண்டது. இதை காண இந்துக்கள் தவிர சுற்றுலா பயணியர் பெருமளவில் குவிகின்றனர்.கிரிஸ்டே ரெடென்டர்!தென் அமெரிக்க நாடான பிரேசில், ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ளது. இந்த சிலை, 30 மீட்டர் உயரமுள்ளது. நகரத்தின் முக்கிய சின்னமாக விளங்குகிறது. இருகைகளையும் விரித்து வரவேற்கும் இயேசுநாதரின் சிலை. சுற்றுலா பயணிகளிடம் மிகவும் பிரசித்தி பெற்றது. இது, 710 மீட்டர் உயரமுள்ள கார்கோவடோ மலை மீது அமைந்துள்ளது. இதன் மீது ஏறி அண்ணாந்து பார்த்து வியக்கின்றனர் பயணியர், சிலையின் அடியில் உள்ள சிறிய ஆலயத்தில் பிரார்த்தனையும் செய்கின்றனர். தினமும், 4000க்கும் மேற்பட்ட பயணிகள் இதை பார்த்து செல்கின்றனர்!ஜெயின்ட் புத்தா!ஆசிய நாடான சீனா, சிச்சுவான் மாகாணத்தில், கல்லால் ஆன புத்தர் புடைப்பு சிற்பம் உள்ளது. இது, 1200 ஆண்டு பழமையானது. அப்பழுக்கு இன்றி கம்பீரமாக காட்சி தருகிறது. இதன் உயரம், 71 மீட்டர். இதை, 'லெசன் ஜெயின்ட் புத்தா' என அழைக்கின்றனர். இதன் உருவாக்கம் கி.பி., 713ல் துவங்கியது. உருவாக்க 90 வருடங்கள் தேவைப்பட்டதாக கூறப்படுகிறது.நுாதன மிருகம்! சிங்க உடல் பாதி, மனித உடல் மீதி என தோன்றுகிறது இந்த சிலை. நம் நாட்டு, நரசிம்மர் சிலையின் தோற்றம் நினைவுக்கு வரும். ஆசிய நாடான சீனாவில் புனைக்கதை படி, ஒரு நுாதன மிருகம் உண்டு. அது, சிங்க முகமும், மீன் உடலும் கொண்டது. கடும் புயல் ஒன்று சிங்கப்பூரை தாக்கிய போது இந்த நுாதன மிருகம் காப்பாற்றியதாக நம்பிய மக்கள், நினைவு சின்னத்தை நிறுவினர். ஆசிய நாடான சிங்கப்பூரில், 37 மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது.சுதந்திரதேவி!அமெரிக்கா, நியூயார்க் நகரில் சுதந்திர தேவி சிலை, 93 மீட்டர் உயரமுள்ளது. இதன் எடை, 204 மெட்ரிக் டன். சிலையின் கால் செருப்பின் நீளம், 7.6 மீட்டர். சிலையில், 351 படிக்கட்டுகள் உள்ளன. இவற்றில் ஏறினால் சிலையின் கிரீடத்தை அடையலாம். அங்கிருந்தவாறு அமெரிக்க மண்ணை பார்ப்பது தனி அழகு.மதர்லேண்ட்!இது, 102 மீட்டர் உயரமுள்ள சிலை. ஐரோப்பிய நாடான உக்ரேன், கியீவ் நகரில் அமைந்துள்ளது. இந்த நாடு சோவியத் ரஷ்யாவுடன் இணைந்து இருந்த போது வைக்கப் பட்டது. உலகின் மிகப்பெரிய பெண் சிலையாக கருதப்படுகிறது. இதை காண சுற்றுலா பயணியர் குவிந்து வருகின்றனர்.