அதிமேதாவி அங்குராசு!
மரம் இயற்கையின் வரம்!பழங்காலத்தில் இயற்கையை பல வகையிலும் போற்றியுள்ளனர் மக்கள். சங்கத் தமிழ் நுாலான நற்றிணையில் இயற்கையை காட்டும் காட்சி சுவையானது. தமிழக மக்களின் பண்பு நெறியை அது உணர்த்துகிறது.தலைவனும், தலைவியும் புன்னை மரத்தின் அருகே சந்திப்பர். வெட்கத்துடன் சற்று விலகி நிற்கும் தலைவி, அந்த மரம் முளைத்து, தளிர்த்து வளர்ந்த விதத்தை அனுபவத்துடன் அழகுற வர்ணிப்பாள். அந்த மரத்தை பேண வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துவாள். மரம், செடி, கொடிகளை முக்கியமாக கருதும் பண்பு, தமிழர்களிடம் இருந்ததையே இது காட்டுகிறது.தமிழகத்தில் பல கோவில்களில் உள்ள கல்வெட்டுகளில், மரங்களின் சிறப்பு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றை தெய்வமாகவும், உறவாகவும் போற்றியுள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தந்த மண்ணுக்கு ஏற்ப வளரும் மரம், செடி, கொடி, புல், பூண்டுகளை மறக்கக்கூடாது; பேணி காக்க வேண்டும். வீட்டை சுற்றியுள்ள மரம், செடி, கொடிகளை அறியும் ஆர்வத்தை வளர்த்து கொள்ளுங்கள்.போரும் மரமும்!பழங்காலத்தில் போர் துவங்கும் முன் அதற்கான தயார் நிலை, வியூகங்கள் அமைத்தல் என பலவற்றை மன்னர்கள் கவனிப்பர். அவர்கள் வீரத்துடன் நடத்திய போர் விளையாட்டுகள் பல...தமிழகத்தை ஆண்ட அரசர்கள், நாட்டை மூன்று வித பாதுகாப்பு அரண்களால் காப்பாற்றி வந்தனர். அவற்றை மதில் அரண், நீர் அரண், காட்டு அரண் என்று குறிப்பர். இந்த அரண்கள் பற்றி பார்ப்போம்...மதில் அரண்: அரண்மனையையும், தலைநகரையும் சுற்றி மண்ணாலும், கல்லாலும் அமைக்கப்படும் கோட்டைச்சுவரே மதில் அரண் என அழைக்கப்பட்டது.நீர் அரண்: கோட்டைக்கு வெளியில் அமைந்த அகழியை நீர் அரண் என்பர். அந்த அகழியில் நீரை நிரப்பி, அச்சுறுத்தும் வகை விலங்கான முதலைகளை விட்டிருப்பர். அந்த அரணை கடந்து, கோட்டைக்குள் புக முடியாத படி அமைந்திருக்கும்.காட்டு அரண்: நாட்டை சுற்றி பெரிய காட்டை உருவாக்கி பாதுகாப்பர் மன்னர்கள். எளிதில் யாரும் நுழைய முடியாத அளவு அரணாக அமைந்திருக்கும் அந்த காடு. அதை காவல் காடு என்றும் குறிப்பிடுவர்.தமிழகத்தை ஆண்ட சேரர், சோழர், பாண்டிய பேரரசர்களும், சங்ககால குறுநில மன்னர்களும் வெளியிட்டுள்ள காசுகளில் வில், புலி, மீன் போன்ற அரச முத்திரை ஒருபுறமும், மறுபுறம் சிவ மங்கலச் சின்னங்களுடன் வேலிட்ட மரமும் காணப்படுகின்றன. காசுகளில் உள்ள மரத்தை, காவல் மரம் என்பர். இது பற்றி, நாணயவியல் அறிஞர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்து விளக்கமாக பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.மரங்களை, தெய்வத்துடன் இணைத்து போற்றுவதும் தமிழகத்தில் மரபாக உள்ளது. கல்லால மரம் என்பது, விழுதில்லா மரம். ஆலமரம் போல் இருக்கும். அதன் கீழ் அமர்ந்து, சிவன் ஞானத்தை உரைப்பது போன்ற சிற்பங்களை கோவில் சிற்பதொகுப்புகளில் காணலாம்.போதி என்பது அரசமரம். கவுதமபுத்தர், அரச மரத்தடியில் தவம் மேற்கொண்டபோதுதான், ஞானோதயம் ஏற்பட்டதாக புத்தசரிதம் கூறுகிறது. பீகார் மாநிலம், கயா நகரில் உள்ள அரசமரத்தை, 'மகாபோதி' என பவுத்தர்கள் போற்றி வழிபடுகின்றனர். தமிழக கோவில்களில் ஏதேனும் ஒருவகை மரத்தை தெய்வமாகப் போற்றி வழிபடுவதை காணலாம். அதை, 'தலமரம்' என்பர். இதுபற்றி, கடலுார் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவர், விரிவாக ஆராய்ந்து புத்தகம் எழுதியுள்ளார்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.