உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

வாலிபால்!உலக அளவில் விளையாடப்படுகிறது வாலிபால். அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் ஜி.மார்கன் குழுவாக விளையாடும் வகையில், 1895ல் முதன் முதலில் நடத்தினார்.ஆரம்பத்தில் டென்னிஸ் வலையை, ஆறு அடி உயர கம்பங்களுக்கு இடையே கட்டி, எல்லை கோடு நிர்ணயம் செய்து, அணிக்கு, 10 பேர் கொண்டு விளையாடினர். பந்துக்கு பதில், 'ப்ளாடர்' பயன்படுத்தப்பட்டது. கைகளால் உந்தி தள்ளியும் அடித்தும் ஆடினர். எந்த பக்கம் நிலத்தில் பந்து விழுகிறதோ, அந்த அணி ஒரு புள்ளி இழந்ததாக கருதப்பட்டது. பின், பந்தை அடிக்கும் முறைகளும், தடுக்கும் முறைகளும் வகுக்கப்பட்டன. இதனால் கூடுதல் விறுவிறுப்பு ஏற்பட்டது. உடல் திறன், புத்தி கூர்மையை பயன்படுத்தும் தருணங்கள் அதிகரித்தன. இது, ரசிகர்களை பரவசமடைய செய்தது. ஆட்டத்தின் சிறப்பை உணர்ந்து, 1928-ல் அமெரிக்க வாலிபால் சங்கம் சில விதிமுறைகளை உருவாக்கியது. அதன்படி நடுவர்கள் நியமிக்கப்பட்டனர். விதிமுறைகள் சிறப்பாக வகுக்கப்பட்டன.வட அமெரிக்க நாடான கனடா, கரீபியன் நாடான கியூபா, ஆசிய நாடுகளான ஜப்பான், சீனா போன்றவை, ஆட்டத்தின் புதுமை உணர்ந்து அங்கீகரித்தன. அணிகளை உருவாக்கின. மைதானத்தின் அளவு, விளையாட்டு வீரர்கள் எண்ணிக்கை என பல விதிகள் உருவாக்கப்பட்டன. சர்வதேச அளவில் வாலிபால் பெடரேஷன் என்ற அமைப்பு, 1947ல் நிறுவப்பட்டது. ஒலிம்பிக் போட்டிகளில், 1965ல் சேர்க்கப்பட்டது. இப்போது உலகம் முழுதும் வாலிபால் உற்சாகமாக விளையாடப்படுகிறது.வெற்றிலை சூயிங்கம்!குழந்தைகளுக்கு பிடித்தமானது சூயிங்கம். அடம் பிடிக்கும் குழந்தை கூட, 'பபிள்கம்' என்ற பெயரை கேட்டால் அடங்கிவிடும்.ஐரோப்பிய நாடான பின்லாந்தில் உலகின் மிகத் தொன்மையான சூயிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது; பிர்ச் என்ற மரப்பட்டையில் எடுக்கப்பட்டது. இதில் மனித பல்தடம் பதிந்துள்ளது. தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீசில், மஸ்டிக் என்ற மரத்திலிருந்து எடுக்கப்பட்ட பிசினை மெல்வது தாடைக்கான பயிற்சியாக இருந்துள்ளது.வட அமெரிக்க பகுதியில் மாயன் நாகரிக காலத்தில், சிக்லி என்ற மரப்பட்டையில் எடுத்த பிசினையும், ஆசிய நாடான சீனாவில் ஜின்செங் என்ற செடி வேரில் எடுக்கப்பட்ட பிசினையும் மென்றதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. பழங்கால முதலே இந்தியாவில், வெற்றிலை, பாக்கு, சூயிங்கம் போல் மெல்லப்படுகிறது.வட அமெரிக்க நாடான மெக்சிகோவில், சிக்கில் என்னும் பசையை வேக வைத்து, பக்குவப்படுத்தி மென்று வந்ததற்கு சான்றுகள் உள்ளன. இது, 19ம் நுாற்றாண்டில் அமெரிக்காவில் அறிமுகமானது. இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் தான், சூயிங்கம் மெல்லும் பழக்கத்தை உலகம் முழுதும் பரப்பினர்.சூயிங்கம் தயாரிப்பில், பாலிவினைல் அசிட்டேட், பாலிமர் ஆகிய வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. எனவே, ஒட்டும்தன்மையும் நெகிழ்வும் பெற்று குழந்தைகளை கவர்கிறது.எப்போதும் சூயிங்கம் மென்றுகொண்டிருப்பது ஆபத்து என்கின்றனர் மருத்துவர்கள். - என்றென்றும் அன்புடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !