பழிக்குப் பழி
ஏப்ரல் முதல் நாள் - பள்ளியில், கடைசித் தேர்வு நடந்து கொண்டிருந்தது.முந்தைய தேர்வுகளில், பால் பாயின்ட் பேனாவை பயன்படுத்தி எழுதி வந்தான் விமல்; இன்று, பழைய இங்க் பேனாவை தேடி எடுத்து வந்து எழுதினான். தேர்வு முடிந்தது. பள்ளி வளாகத்தில் மாணவர்களின் இரைச்சல்.எல்லாரும், மாறி மாறி, பேனாவை உதறி மையை தெளித்துக் கொண்டிருந்தனர்; சிலர், அதற்காகவே, 'ஏ.எப்' என சீவிய ரப்பரை பயன்படுத்தி, சீருடையில் பதிக்க போட்டி போட்டனர்.எடுத்து வந்திருந்த இங்க் பேனாவை மூர்க்கமாக உதறி எதிரில் வந்தவர்கள் மீதெல்லாம் தெளித்துக் கொண்டிருந்தான் விமல். வீர விளையாட்டில் சாகசம் செய்வது போல் காணப்பட்டான். அவனைத்தேடி மைதானத்துக்கு வந்தான் அமல். தொலைவில் ஓடிக் கொண்டிருந்தனர் சிறுவர்கள்.''ஹே... யாரும் என் மேல இங்க் அடிக்க முடியலையே...'' கூவியபடி, பலருக்கு முன் போவதும், தப்பி ஓடுவதுமாக இருந்தான் மதன்.விடாமல் துரத்தியபடி இருந்தான் விமல்; ஒரு கட்டத்தில் வென்றான்.அவன் தெளித்த வேகத்தில் பேனா நிப் பகுதி கழன்று விழுந்தது; இங்க் முழுவதும், மதன் சட்டையில் சிந்தி, கழுத்து வழியாக வழிந்தது.திரும்பிப் பார்த்த மதன், கழுத்தில் கை வைத்தான்; முழுதும் நீலநிறமாக நனைந்தது. மாணவர்கள் அவனைச் சூழ்ந்தனர்; தனியாக மாட்டியவனை தாக்குவது போல் கேலி செய்தனர். புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான் மதன். அருகில் நெருங்கி, ''சாரிடா... தெரியாம கொட்டிடுச்சு...'' என்றான் விமல்.ஆத்திரம் கொண்ட மதன், கண் இமைக்கும் நேரத்தில், பேனா நிப் பகுதியால், விமல் கையில் ஓங்கிக் குத்தினான்.''அம்மா...மா...மா...''அலறி சாய்ந்தான் விமல். ரத்தம் பாய்ந்தது.கேலி செய்தவர்கள் வாயடைத்து நின்றனர்.தப்பி ஓடினான் மதன்.விமலை ஆசிரியர் அறைக்கு துாக்கி சென்று முதலுதவி செய்தனர்.''நல்ல வேளை, காயம் பெரிதாக இல்லை; சட்டை தான் கிழிந்திருக்கிறது...'' என சமாதானப்படுத்தினார் ஆசிரியர்.இரண்டு பேர் அவனை பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். வழியில், கைப்பந்து மைதானம் அருகே பெரும் சண்டை நடந்து கொண்டிருந்தது.தப்பி ஓடிய மதனை மடக்கி பிடித்து, தாக்கிக் கொண்டிருந்தான் அமல்.''விட்டுடுடா... தெரியாம குத்திட்டேன்...''எந்த சமாதானத்தையும் ஏற்காமல், மூர்க்கமாக தாக்கிக் கொண்டிருந்தான் அமல்.ஓடிச்சென்று கூட்டத்தை விலக்கியபடி, ''சொன்னா கேள்... ஏதோ ஆத்திரத்தில் குத்தி விட்டான்; பழிக்குப் பழி வாங்குவது சரியாகாது; அவனை விடு...'' என்ற விமல், பலப்பிரயோகம் செய்து மதனை விடுவித்தான்.சண்டைக்கோழி போல் சிலிர்த்த அமலும் அமைதியானான். மூவரும் கட்டித் தழுவி அன்பை பொழிந்தனர். தவறுக்கு மன்னிப்பு கோரினர்.செல்லங்களே... பழி வாங்கும் எண்ணத்தை விடுத்து, அன்புடன் வாழ பழகுங்கள்.முகிலை ராசபாண்டியன்