கனடா வாத்து!
வட அமெரிக்காவில் காணப்படுகிறது கனடா வாத்து. இதை, நீர்க்கோழி எனவும் அழைப்பர். உருவத்தில் மிகப்பெரியது. உடல், 110 செ.மீ., நீளம் வரை இருக்கும். இறக்கையின் நீளம் அதிக பட்சமாக, 180 செ.மீ., வரை இருக்கும். நீண் கழுத்துள்ளது. பெரும்பாலும், தலை கறுப்பு நிறத்தில் இருக்கும். கழுத்தில் வெள்ளை நிற வளையம் காணப்படும். எப்போதும் சத்தமிட்டபடியே இருப்பதால், 'சத்தமிடும் வாத்து' என்ற பெயரும் உண்டு.ஆறு, குளம், ஏரிக்கரையோரம் வசிக்கும். சிறிய நீர் நிலையிலும் கூடு கட்டும். விமான ஓடுதளம், கார்நிறுத்தம் என இரைச்சல் மிகுந்த இடங்களிலும் கூடு கட்டும். வாகன நடமாட்டம் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. கூடு கட்டும் பணியை பெண் வாத்து செய்யும். அப்போது அந்த பகுதியை வலம் வந்து கண்காணிக்கும் ஆண் வாத்து. ஆபத்து என்றால் எச்சரிக்கும்.ஒரு பருவத்தில், ஏழு முட்டைகள் வரை இடும். குஞ்சு, 30 நாட்களில் பொரிக்கும். அலகின் முனையில் உள்ள பற்களால், முட்டையை துளைத்து வெளியே வரும். இதற்கு, இரண்டு நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும்.தாய் மற்றும் தந்தை வாத்துக்கள் உதவியுடன் குஞ்சு உடனடியாக நீந்தும். ஒன்பது வாரத்திற்குப் பின் பறக்கக் கற்றுக் கொள்ளும்.வட அமெரிக்காவில் இலையுதிர் காலம் வந்தால், வட ஐரோப்பா பகுதியை நோக்கி பறந்து இடம் பெயரும். குளிர் காலத்தில் திரும்பி வரும். வட அமெரிக்கா நாடான கனடா பகுதியில் அதிகம் உள்ளதால், 'கனடா வாத்து' என்ற பெயரை பெற்றது.கழுகு, வல்லுாறு, பனி ஆந்தை, பனி நரி போன்றவை இவற்றை வேட்டையாடி தின்னும்.