தொண்டுள்ளம்!
தஞ்சாவூர் மாவட்டம், திருப்பாலைத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 1997ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு! உடன் படித்த அம்பிகா படு சுட்டி; படிப்பில் முதல் மாணவியாக இருந்தாள். ஆனால், தினமும் இரவு, 8:00 மணிக்கு மேல் தான், வீடு திரும்புவதாக தலைமையாசிரியை லுாசி வசந்தாவுக்கு புகார் வந்தது. அந்த மாணவியின் அம்மாவை அழைத்து விசாரித்தார்; கண்ணீர் சிந்தியபடி, 'நான் விதவை; எனக்கு நான்கு மகள்கள்; இளையவள் அம்பிகாவை மட்டும் படிக்க வைக்கிறேன்... பள்ளிக் கட்டணம் செலுத்துவதற்காக, மாலையில் ஒரு வீட்டில் வேலை செய்கிறாள்...' என கூறினார். உடனடியாக, 'இனி அவளை வேலைக்கு அனுப்ப வேண்டாம்; நானே தேவையான உதவிகளை செய்கிறேன்... படிப்பில் போதிய கவனம் செலுத்தட்டும்...' என்றார் தலைமை ஆசிரியை. தயங்கியவரை சம்மதிக்க வைத்து, 'படிப்பு, ஒழுக்கம், சக மாணவ, மாணவியரிடம் அன்பு செலுத்துதல் என சிறந்து விளங்குகிறாள் உங்கள் மகள். ஏழ்மையால் வேலைக்கு செல்வதை என் மனம் ஏற்கவில்லை. என்ன படிக்க விரும்புகிறாளோ, அது நிறைவடையும் வரை, கட்டணத்தை ஏற்கிறேன்...' என உறுதி கூறினார். அந்த உதவியை பயன்படுத்தி நன்றாக படித்து, தனியார் கல்லுாரியில் விரிவுரையாளராக பணிபுரிகிறாள் அந்த தோழி. என் வயது, 35; உதவிகளால் மாணவியர் வாழ்வில் ஒளி ஏற்றிய தலைமையாசிரியையின் தொண்டுள்ளத்தை வணங்கி மகிழ்கிறேன். - ரா.மாதவன், சென்னை.