உள்ளூர் செய்திகள்

நாளைக்கு வா!

குன்றத்தூர் என்னும் ஊரில் மதன், கார்த்திக் என்ற இரு இளைஞர்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் வேலைத் தேடி அலைந்தனர்.அடுத்த ஊரிலுள்ள ஜமீன்தாருக்கு வேலையாள் தேவை என்பதை கேள்விப்பட்டு, ஜமீன்தாரின் மாளிகையை அடைந்தனர்.காவல்காரனும், ''உங்களை மூன்று நாட்களுக்கு பின் வந்து பார்க்குமாறு ஜமீன்தார் உங்களிடம் சொல்லச் சொன்னார்,'' என்றான்.இருவரும் ஊருக்குத் திரும்பினர்.நான்காவது நாள் அதிகாலையில், ''இன்று ஜமீன்தாரைப் பார்க்க போகவேண்டும் வா,'' என்றான் மதன்.''இப்பவே என்ன அவசரம்? சற்று நேரத்திற்கு பின் போகலாம்,'' என்றான் கார்த்திக்.''நான் இப்போதே போகிறேன். நீ வேண்டுமானால் பிறகு வா,'' என்று கூறிவிட்டுச் சென்றான் மதன்.மதன் போய் இரண்டு மணி நேரத்திற்கு பிறகே ஜமீன்தாரின் ஊர் போய்ச் சேர்ந்தான் கார்த்திக். அங்கு மாளிகை வாசலில் மதன் உட்கார்ந்திருப்பதைக் கண்டு, ''நீ எனக்கு முன்னால் வந்து என்ன பயன்? காத்திருக்க வேண்டித்தானே ஆயிற்று?'' என்று சலித்துக் கொண்டான் கார்த்திக்.அப்போது காவல்காரன் வந்து, ''உங்கள் இருவரையும் இரண்டு நாட்களுக்கு பிறகு ஜமீன்தார் வரச் சொன்னார்,'' என்றார்.இருவரும் தம் ஊருக்குக் திரும்பினர்.''ஜமீன்தார் இப்படி நாட்களைத் தள்ளிப் போடுகிறாரே... இவர் நமக்கு வேலை கொடுக்கப் போகிறாரா என்ன? அலைச்சல்தான் நமக்கு!'' என்றான் கார்த்திக்.இரண்டு நாட்களான பின் காலையில் புறப்பட்ட மதனிடம், ''நீ போ. அந்த ஜமீன்தார் எப்படியும் நம்மைக் காத்திருக்கும்படி சொல்லத்தான் போகிறார். நான் மத்தியானம் வருகிறேன்,'' என்று கூறினான்.காலையில் வந்த மதனை மத்தியானம் தான் கூப்பிட்டுப் பார்த்தார் ஜமீன்தார் .''நீ இப்போது சாப்பிட்டு விட்டு, நாளை சாயந்திரம் வந்து என்னைப் பார்,'' என்றார்.ஊருக்குத் திரும்பிச் சென்ற போது வழியில் கார்த்திக் வந்து கொண்டிருப்பதைக் கண்டான் மதன்.ஜமீன்தார் கூறியதைச் சொல்லவே, ''எனக்குத் தெரியும் இப்படித்தான் அவர் கூறுவார்,'' என்று கூறி ஏளனமாகக் சிரித்தான்.''வேலை கிடைக்க வேண்டுமானால் அலைந்து திரிந்துதான் ஆகவேண்டும். நாளை மாலை இருவரும் போகலாம்,'' என்றான் மதன்.''சரி... நீ சொல்வதால் வருகிறேன். ஆனால், இது தான் கடைசி முறை,'' என்றான் கார்த்திக்.மறுநாள் மாலை இருவரும் சேர்ந்தே ஜமீன்தாரின் வீட்டிற்குச் சென்றனர்.வாசல் காவலனும், ''ஜமீன்தார் உங்களை இன்றிரவு இங்கே தங்கச் சொன்னார். நாளை காலையில் உங்களிடம் பேசுவார்,'' என்றான்.''வேலை கொடுக்க முடியாது என்றால் தெளிவாக அவர் சொல்லிவிடலாமே. ஏன் இப்படி இழுத்தடிக்க வேண்டும். நான் போகிறேன்,'' என்று கூறியவாறே அங்கிருந்து சென்று விட்டான் கார்த்திக்.ஆனால், மதன் அவனோடு போகவில்லை.வாசல் காவலாளி மறுபடியும் உள்ளே போய் விட்டு வந்து, ''ஓ! உன் நண்பன் போய்விட்டானா? நீ இன்றிரவு இங்கே தானே இருக்கப்போகிறாய்? நீ கடைக்குப் போய் ஒரு ஜமுக்காளமும், ஒரு போர்வையும் வாங்கி வர வேண்டும் என்று ஜமீன்தார் சொல்லி கொஞ்சம் பணம் கொடுத்திருக்கிறார். போய் அவற்றை வாங்கி வா,'' என்று கூறிப் பணத்தையும் கொடுத்தான்.கடைக்குப் போய் அவற்றை வாங்கி வந்து, ஜமீன்தார் முன் வைத்து மீதிப் பணத்தையும் கொடுத்தான்.இவை உனக்காகத் தான் வாங்கி வரச் சொன்னேன். ''சாப்பிட்டு விட்டு இங்கே படுத்துத் தூங்கு. காலையில் பேசலாம்,'' என்றார் ஜமீன்தார்.அன்றிரவு அங்கேயே சாப்பிட்டு விட்டு, ஜமுக்காளத்தை விரித்து அதில் படுத்து போர்வையை போர்த்தியபடி நன்கு தூங்கினான்.மறுநாள் -காலை ஜமீன்தார் அவனைக் கூப்பிட்டு, ''உன்னை எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.நீ என்னை முதலில் காண வந்த நாளிலிருந்தே என்னிடம் வேலைக்குச் சேர்ந்து விட்டதாகக் கணக்கில் எடுத்துக் கொள்கிறேன். உனக்கு மாதம், 8 ஆயிரம் சம்பளம்.''நீ என் கிராமங்களுக்கு போய் எனக்கு வர வேண்டிய பாக்கிகளை வசூலித்து வந்து கொடுப்பதுதான் உன் வேலை. இதற்குப் பொறுமையும், நேர்மையும் கொண்ட ஒருவனைத் தேர்ந்தெடுக்க நினைத்தேன். நீ அந்த வேலைக்கு ஏற்றவன் என நிரூபித்து விட்டாய். உன் வேலையை பார்த்து இன்னும் சம்பளத்தை அதிகப்படுத்துகிறேன்,'' என்றார் ஜமீன்தார்.தன் பொறுமையால்தான் தமக்குவேலை கிடைத்தது என்பதை நினைத்து மகிழ்ந்தான் மதன். விஷயத்தை கேள்விப்பட்ட கார்த்திக் நொந்து நூடுல்ஸ் ஆனான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !