கல்வி ஒளி தந்த கர்சன்!
ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் கர்சன். இந்தியாவை, 1899 முதல் 1905 வரை ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக் காலத்தில், பிளேக் என்ற கொடூர நோய் தொற்றியது. இந்தியாவின் பல பகுதிகளை கடுமையாக பாதித்தது; கடும் பஞ்சமும் நிலவியது. அதில், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மடிந்தனர்.இந்த நிலையிலும், உப்புக்கு விதித்திருந்த வரியை குறைத்தார் கர்சன். பஞ்சத்தை ஆய்வு செய்ய குழுவை ஏற்படுத்தினார். அந்தக் குழு வழங்கிய சிபாரிசு அடிப்படையில்...* பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில், நிலவரி வசூல் செய்யப்படவில்லை * உழவர்களுக்கு, கடனுதவி வழங்கப்பட்டது* பாசன ஏரிகளில் மராமத்து பணிகள் செய்து, இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டது * விவசாயிகளுக்கு உதவ வேளாண் வங்கிகள் நிறுவப்பட்டன.கல்வித்துறையிலும், சீர்த்திருத்தங்களைச் செய்தார் கர்சன். இம்மாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் கல்வி நிபுணர்கள் மாநாடு கூட்டினார். நிபுணர்கள் பரிந்துரைப்படி, கல்வி குறித்து ஆராய குழுவை நியமித்தார். இது, பல்கலைக்கழக ஆய்வுக்குழு எனப்பட்டது. அந்த குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. அதில் குறிப்பிட்டிருந்த சிபாரிசு அடிப்படையில், 1904ல் இந்திய பல்கலைக்கழகச் சட்டம் இயற்றப்பட்டது.இச்சட்டப்படி, உயர் கல்வி மீது, அரசின் ஆதிக்கம் அதிகரித்தது. கல்லுாரி, கல்வி நிலையங்களைப் மேற்பார்வையிட்டு ஆய்வு அறிக்கையை வழங்கினர் அரசு அதிகாரிகள். அதன் அடிப்படையில், சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. நாடு முழுவதும் ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி விரைவு படுத்தப்பட்டது. இந்திய ரயில்வே வாரியத்தையும் நிறுவினார். இந்தியாவில், 30 ஆயிரம் கி.மீ., துாரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. ராணுவத்தில் பல சீர்த்திருத்தங்களை கொண்டு வந்தார் கர்சன். * வீரர்களுக்கு, நவீன வகை ஆயுதங்களை தந்தார்* படைத் திறன் வளர்ப்பில் தீவிர கவனம் செலுத்தினார் * காவல்துறையில் உயர் அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்தார்* உள்நாட்டு பாதுகாப்பில் காவலர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது* காவல் துறையின் திறன் வளர்க்க பயிற்சி மையங்கள் ஏற்படுத்தினார்* நாடு முழுதும் ரகசிய போலீசாரை நியமித்து கண்காணிப்பை பலப்படுத்தினார்.உள்நாட்டு காவல் நிர்வாகத்தை பலப்படுத்தி கண்காணிக்க, ஓர் ஆய்வு குழுவை நிறுவினார்.விவசாய உற்பத்தியிலும் தனி கவனம் செலுத்தினார் கர்சன். விவசாயத்துக்கு வரி நிர்ணயித்து, உற்பத்தி அடிப்படையில் வசூலிக்கும் கொள்கையை அமல் படுத்தினார். கூட்டுறவுச்சங்கச் சட்டம் கொண்டு வந்தார். அது உழவர் நலனைக் காக்கும் வகையில் அமைந்தது. குறைந்த வட்டியில் உழவர்களுக்கு கடன் வழங்கியது. விவசாயத்தில் உற்பத்தியை பெருக்க...* விவசாய உயர் கண்காணிப்பாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டது* பீகார் மாநிலம், பூசாவில் விவசாய ஆராய்ச்சிக் கழகம் ஏற்படுத்தப்பட்டது* சிந்து நதியில் பாசனக் கால்வாய்கள் வெட்டப்பட்டன* சீனா கால்வாய், ஜீலம் கால்வாய், ரவி - பியாஸ் ஆறுகளில் கிளை கால்வாய்கள் அமைத்து, பாசனம் விரிவுபடுத்தப்பட்டது.இவ்வாறு நிலத்தை வளப்படுத்தி உற்பத்தியை பெருக்க, கர்சன் ஆட்சி காலத்தில் தான் முயற்சி எடுக்கப்பட்டது.வங்காள மாகாணத்தை, நிர்வாக வசதிக்காக, 1905ல் பிரித்தார் கர்சன். மேற்கு வங்க தலைநகராக கோல்கத்தாவும், கிழக்கு வங்க தலைநகராக டாக்காவும் விளங்கின. இதை எதிர்த்து நடந்த கிளர்ச்சிக்கு பணியவில்லை கர்சன். இந்த சீர்திருத்தத்தால், நிர்வாக ரீதியாக கடும் பின்னடைவை சந்தித்தார். ராணுவ உயர் அதிகாரியாக இருந்த கிட்சனருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதிகாரப்பகிர்வு தொடர்பாக, கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆங்கிலேய அரசு, கிட்சனரை ஆதரித்தது. இதனால் மனம் வருந்தி, பதவியை துறந்தார் கர்சன்.இந்திய வரலாற்றில், இவரது ஆட்சி, வளர்ச்சியின் காலமாக கணிக்கப்பட்டுள்ளது.