உள்ளூர் செய்திகள்

காசு படுத்திய பாடு!

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1977ல், 8ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்!ஒருநாள் பள்ளி சென்ற வழியில், ஐந்து ரூபாய் நோட்டு மடிந்த நிலையில் கிடந்தது. அதைப் பிரித்தேன். மொத்தம், எட்டு ரூபாய் இருந்தது. எடுத்துப்போனால், அடி பின்னி விடுவார் அப்பா. மனதில் ஒரே குழப்பம். யோசித்தேன். 'விபரத்தைக் கூறி, வகுப்பாசிரியரிடம் கொடுத்து விடலாம்' என, முடிவு செய்து காத்திருந்தேன். அருகே, கவலை தோய்ந்த முகத்துடன் இருந்தாள் தோழி பொற்கொடி. விசாரிக்கையில், 'பள்ளிக்கு சிறப்புக் கட்டணம் செலுத்த, இன்று கடைசி தேதி. கடன் வாங்க முடியாததால், 'படிப்பை நிறுத்தி விடு' என்று கூறி விட்டார் அம்மா. எப்படியாவது, 10ம் வகுப்பை முடிக்க விரும்புகிறேன்...' என்று விசும்பினாள்.கண்டெடுத்த, எட்டு ரூபாயை அவளிடம் தந்தேன். மேலும், 50 காசு தேவைப்பட்டது. இங்க் போட வைத்திதிருந்த காசை, தோழி சுபாங்கி கொடுத்தாள். நிம்மதி ஏற்பட்டது. சிறப்புக் கட்டணம் செலுத்தியாகிவிட்டது. உதவியது மகிழ்ச்சி தந்தாலும், 'கீழே கிடக்கும் எதையும் எடுக்க கூடாது' என, உறுதி பூண்டேன். என் வயது, 55; பயணங்களின் போது பலமுறை கேட்பாரற்று கிடக்கும் பணத்தை கண்டுள்ளேன். உடன் வருபவர், 'வழியில் கிடக்கும் சீதேவியை விடாதே...' என்பர். அந்த அறிவுரைகளை புறந்தள்ளி உறுதியுடன் வாழ்கிறேன்.- இந்திராணி தங்கவேல், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !