உள்ளூர் செய்திகள்

தாமதம்

கொல்லுப்பட்டி துவக்கப்பள்ளியில், 5ம் வகுப்பு படித்து வந்தான் ஹரிஹரன். படிப்பில் கெட்டிக்காரன். தினமும், ௩ கி.மீ., நடந்தபடி பள்ளிக்குச் சென்று வருவான். கூலி வேலை செய்தனர் பெற்றோர்.ஒரு நாள், பள்ளிக்கு தாமதமாக வந்தான் ஹரிஹரன். உடன் படித்த குமாரும், தாமதமாக வந்தான். இருவரையும் வகுப்புக்கு வெளியே நிறுத்தியிருந்தார் ஆசிரியர்.முதலில், ஹரிஹரனை விசாரித்தார்.''ஐயா... அதிகாலையே கூலி வேலைக்கு சென்றுவிடுவர் பெற்றோர். வீட்டு வேலைகளை முடித்து, சமைத்து புறப்பட தாமதமாகி விட்டது... மன்னியுங்கள்...'' வீட்டில் நடந்த நிகழ்வுகளை விளக்கினான். அதை ஏற்று, ''இனி, இந்த மாதிரி காரணங்களை சொல்ல கூடாது...'' என கண்டிப்புடன் அனுமதித்தார்.வழியில் சினிமா தியேட்டரில் குமாருக்கு விருப்பமான நடிகரின் சினிமா வெளியாகியிருந்தது. அங்கு, திரண்டிருந்த ரசிகர்கள் நடிகரின், 'கட் அவுட்'க்கு பால் அபிஷேகம் செய்தனர். அதில் பங்கேற்றிருந்தான் குமார். ஆசிரியர் விசாரித்த போது அதை மறைத்து, ''வரும் வழியில், ஒரு முதியவர் மயங்கி விழுந்ததை கண்டேன்... அவருக்கு முதலுதவி செய்து, தண்ணீர் கொடுத்து வர நேரமாகிவிட்டது...'' என்றான் குமார்.நன்றாக கவனித்து விசாரித்தார் ஆசிரியர். சொன்னது பொய் என்பதை உணர்த்தும் வகையில், ''உண்மையைக் சொன்னால் மன்னிப்பு வழங்கி, வகுப்பில் அனுமதிப்பேன்... இல்லையென்றால், வெளியில் காயும் வெயிலில் தான் நிக்கணும்...'' என கண்டிப்புடன் கூறினார்.தவித்தபடி, ''செய்தது தப்பு தான் ஐயா... தாமதத்துக்கான உண்மை காரணத்தை சொல்லி விடுகிறேன்...'' என கண்ணீர் மல்கினான்.''வாயிலிருந்து உண்மை வரணும்; அதுக்காகதான் காத்திருந்தேன்...''''மன்னித்து விடுங்கள் ஐயா; இனிமேல், இது போல் நடக்க மாட்டேன். பொய்யும் பேச மாட்டேன்...'' உறுதி அளித்தான் குமார்.''தப்பு செய்தால், ஒப்புக்கொண்டு, மீண்டும் அதுபோல் செய்யாமல் இருக்க முயற்சிக்கணும்...'' அறிவுரைத்த ஆசிரியர், பாடத்தை துவங்கினார்.குழந்தைகளே... உண்மைக்கு என்றும் அழிவில்லை; உண்மை பேசினால், நன்மை நடக்கும் என உணருங்கள்.ஆர்.தனபால்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !