உள்ளூர் செய்திகள்

புரிஞ்சுதா சார் போயிட்டாரா?

நான் ஆறாம் வகுப்பு படித்த போது, கணக்கு ஆசிரியரை பார்த்தாலே ஒரே அலர்ஜியாக இருக்கும். அவர் பாடம் எடுக்கும் போது கடைசி பெஞ்சில் இருக்கும் சக மாணவி ஒருத்தி, அப்படியே தூங்கி விடுவாள். அவர் பாடம் எடுக்கும் முறை மிகவும் போரடிக்கும். அது தவிர, கணக்கை போட்டுக் காட்டி விட்டு வார்த்தைக்கு வார்த்தை, 'புரிஞ்சுதா, புரிஞ்சுதா?' என்று அடிக்கடி கேட்பார்.'புரிஞ்சுது சார்' என்று சொல்லும் வரை விட மாட்டார்.ஒருநாள் அவர் பாடத்தை முடித்து விட்டு, 'யாருக்காவது சந்தேகம் இருந்தால் கேளுங்க!' என்றார்.எல்லா மாணவிகளும் அவர் சொல்லிக் கொடுத்த கணக்கை, 'பிராக்டிஸ்' செய்யும் போது வகுப்பறையே நிசப்தமாக இருந்தது. ஒரு மாணவி மட்டும் ஆசிரியர் அருகில் சென்று சந்தேகம் கேட்டு கொண்டிருந்தாள். அந்த நேரம் வழக்கமாக கடைசி பெஞ்சில் தூங்கிக் கொண்டிருந்த மாணவி திடீரென எழுந்து சத்தமாக, 'புரிஞ்சுதா சார் போயிட்டாராடி!' என்று சக மாணவியிடம் கேட்க, வகுப்பறையே அதிருமாறு எல்லாரும் சிரித்து விட்டோம்.கணக்கு வாத்தியார் அந்த மாணவியை அழைத்து, என் பேரு, 'புரிஞ்சுதா சாரா' என்று கேட்டு திட்டி விட்டு, அவளுக்கு, 'பனிஷ்மென்டாக' 100 முறை, 'புரிஞ்சுது சார்' என்று முட்டி போட்டு சொல்ல வைத்தார். இப்பவும் யாராவது, 'புரிஞ்சுதா?' என்று கேட்டால், அந்த சம்பவம்தான் என் நினைவில் வந்து போகும்.- வி.சூர்யா,வெட்டுவான்கேணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !