உள்ளூர் செய்திகள்

திரையரங்கில் சுகம்!

சென்னை, ஊரூர், அறிஞர் அண்ணா அரசு உயர்நிலைப் பள்ளியில், 1973ல், 9ம் வகுப்பு படித்தபோது, கோடம்பாக்கத்தில் குடியிருந்தோம். சைதாப்பேட்டை வரை மின் ரயிலிலும், பின் அடையார் வரை பேருந்திலும், நடந்தும் பள்ளியை அடைவேன்.அவ்வளவு பயண துாரம் அலுக்கவே, பள்ளிக்கு மட்டம் போட்டேன். திரையரங்கில் சினிமா பார்த்து, பள்ளிக்கு சென்று வருவது போல் வீட்டுக்கு வந்தேன். யாரும் சந்தேகப் படாததால் இது வாடிக்கையானது. சரியாக, 38 நாட்கள் பள்ளி செல்லவில்லை. வருகை பதிவேட்டில் பெயரை நீக்கி விட்ட தகவல் அறிந்து, பதறியடித்து பள்ளிக்கு ஓடினேன். பெற்றோரை அழைத்து வரச்சொல்லி அனுப்பினர். மறுநாள், அம்மாவுடன் தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்த நொடி, என் வகுப்பாசிரியை வருகைப் பதிவேட்டுடன் வந்தார். எல்லாவற்றையும் அறிந்த அம்மாவின் முகம் வெளிறியது. கண்டிப்புடன், 'எதுவும் செய்ய முடியாதும்மா... 10 நிமிஷத்துல, 'டிசி' கொடுத்துடுறோம்; கூட்டிட்டுப் போயிடுங்க...' என்றார் தலைமையாசிரியர்.ஆத்திரத்தில், என் கன்னங்களில், மாறி மாறி அறைந்தார் அம்மா. வாங்கியபடி வாய் திறக்காமல் நின்றிருந்தேன். இதுகண்டு ஓடிவந்த அறிவியல் ஆசிரியை சகுந்தலா, அம்மாவின் கைகளை தடுத்தார்.என்னை பரிவுடன் அணைத்தபடி, 'அருமையான பையன் ஐயா; எல்லா பாடங்களிலும், 90க்கும் மேல் மதிப்பெண் எடுப்பான்... ஏதோ கெட்ட நேரம், இப்படி செய்துட்டான்... மன்னிச்சி விட்டுடுங்க...' என கண் கலங்கியதும் மனமிரங்கினார் தலைமையாசிரியர். எனக்கு, 62 வயதாகிறது. என் மீது முழு நம்பிக்கை வைத்து, படிப்பு வீணாகாமல் காப்பாற்றிய அந்த ஆசிரியையின் பாசப்பிணைப்பை நினைத்த உடன், மெய் சிலிர்க்கிறது. - கே.முகமது பாருக், சென்னை.தொடர்புக்கு: 95000 17176


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !