பெருந்தன்மை!
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், 1965ல் 6ம் வகுப்பு படித்தபோது, இந்தியா - பாகிஸ்தான் போர் மூண்டது. யுத்த நிவாரண நிதி திரட்ட வந்திருந்தார் முன்னாள் முதல்வர் காமராஜர். கூட்ட மேடையில் தேசிய எழுச்சிப் பாடல்கள் பாடிய என்னை பாராட்டி, படிப்பு விவரங்களை விசாரித்தார். மேடையின் ஒரு புறம், நிதி, பொருள் சேகரிக்கும் பணி நடந்தது. ஆடு, மாடு, கோழி, தங்க மோதிரம், வளையல், கம்மல், பணம் என, மனம் உவந்து கொடுத்துக் கொண்டிருந்தனர். மாணவியர் விடுதி அறையில் உடன் தங்கியிருந்த விமலா அக்கா, என்னை அழைத்தார். அணிந்திருந்த மூக்குத்தியை கழற்றி தந்து, யுத்த நிவாரணமாக கொடுத்து வரக் கூறினார். அதன்படி கொடுத்தேன். சேகரித்தவர், 'உன் பெயர் என்ன...' எனக் கேட்டார்; சொன்னேன். மறுநாள் செய்தித்தாளில், நிவாரணப் பொருட்கள் கொடுத்தோர் பட்டியலில், என் பெயரும் இருந்தது. இதை பார்த்த பலர் கேலி செய்தனர். காரணம், எனக்கு காதும், மூக்கும் அப்போது குத்தியிருக்கவில்லை. மிக வருந்தியபடி அக்காவை சந்தித்து, 'உங்க பெயரை சொல்லியிருக்க வேண்டும். தவறுக்கு மன்னியுங்க...' என்றேன். சிரித்தபடியே, 'யார் பெயர் வந்தால் என்ன... பொருள் நம் நாட்டுக்குத் தானே பயன்படுகிறது...' என்றார். மிகவும் வெட்கம் அடைந்தேன்.அன்று முதல், 'எந்த பொருளையும், முழு விபரம் இன்றி கொடுப்பதில்லை' என்ற முடிவை, உறுதியாக கடைபிடித்து வருகிறேன்.தற்போது, என் வயது, 62; பெருந்தன்மையைக் கற்றுத்தந்த அந்த அக்காவின் நினைவு, மனதில் சுழன்று கொண்டே இருக்கிறது!- வி.ரமணி, காஞ்சிபுரம்.