உள்ளூர் செய்திகள்

போட்டி வைக்கப்போறேன்!

நான் மதுரையில் உள்ள பள்ளி ஒன்றில், பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒருநாள், தமிழ் ஆசிரியர் வகுப்பறைக்கு வந்தார். 'இன்று உங்களுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன். போட்டியில் வெற்றி பெறுபவருக்கு கைக்கடிகாரம் பரிசு' என்று கூறினார்.நாங்களும் ஆர்வமாக, 'போட்டி என்ன?' என்று கேட்டோம். அதற்கு அவர், 'யாராவது 20 திருக்குறளை பிழை இல்லாமல், இடைவிடாமல் கூறி அதிலிருந்து ஏதேனும், 10 குறளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்' என்று கூறினார்.மாணவிகள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். அப்போது ஒரு மாணவி சட்டென்று எழுந்து, திருக்குறளை சொல்ல ஆரம்பித்தாள். 20 குறளுக்கும் விளக்கம் அளித்தாள். இதை பார்த்து வியந்த ஆசிரியர், சொன்னது போலவே கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தார்.இந்தப் பரிசை தன் தோழிக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டாள். ஆசிரியர் காரணம் கேட்டதற்கு, 'தன்னுடன் படிக்கும் சக மாணவிகள் அனைவருக்கும் கை கடிகாரம் உள்ளது. இவளுக்குதான் இல்லை. இது பொதுத் தேர்வுக்கு பயன்படும்' என்று கூறினாள்.இதை கேட்டு அனைவரும் வியப்படைந்தோம். அந்த மாணவி எங்கள் அனைவரையும் சிந்திக்க வைத்ததோடு இல்லாமல், இந்த நிகழ்ச்சியை மறக்க முடியாத நிகழ்ச்சியாகவும் ஆக்கிவிட்டாள்.- ஒய்.யாஸ்மின், திருநகர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !