இளஸ்... மனஸ்... (80)
அன்பு பிளாரன்ஸ்...அரசு மேல்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியையாக பணிபுரிகிறேன். கணவர் அரசுக்கல்லுாரியில், விரிவுரையாளர். ஒரே மகனுக்கு வயது 16; பிளஸ் 1 படிக்கிறான்; அவன் மூளை கணினி போல் செயல்படுகிறது. சர்வதேச அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை, உலக நாடுகளின் அரசியல் அமைப்பு சட்டங்கள் மற்றும் மதங்களின் தோற்றத்தை, ஆறு ஆண்டுகளாக அலசி ஆராய்கிறான். இந்தியாவில், தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பலம், பலவீனங்களை கரைத்து குடித்திருக்கிறான். வெகுசீக்கிரமே, அமெரிக்க தேர்தல் முறை, சிற்சில மாற்றங்களுடன், இந்தியாவில் அமலாகும் என ஆரூடம் கூறுகிறான். வெகுஜன மீடியாக்கள் மூலம், இந்திய மக்களை கவர்ந்து, 2040ல், இந்திய அதிபர் பதவியைப் பிடிப்பேன் என சூளுரைக்கிறான். அவனது நடவடிக்கைகள் பயமூட்டுகின்றன. அவன் விஷயத்தில், நாங்கள் செய்ய வேண்டியது என்ன... நல்ல ஆலோசனை கூறு பிளாரன்ஸ்...அன்பு அம்மா...அரசியல் ஒரு சாக்கடை என விலகாமல் அலசி ஆராய்வது வரவேற்க தகுந்த விஷயம்.இந்திய மக்கள் தொகை, 135 கோடி. இந்தியாவில், 28 மாநிலங்களும், ஒன்பது யூனியன் பிரதேசங்களும் உள்ளன. அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட, 22 மொழிகள் உள்ளன. தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட, 2 ஆயிரத்து 598 கட்சிகள் உள்ளன. அவற்றில், எட்டு தேசிய கட்சிகள்; மாநில கட்சிகள், 52; அங்கீகரிக்கப்படாத கட்சிகள் எண்ணிக்கை, 2 ஆயிரத்து 538.சுதந்திர இந்தியாவில், தேசிய கட்சிகள் தேய்ந்து, மாநில கட்சிகள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. இந்த நிலையில் சில சீர்திருத்தங்கள் தேவையாக உள்ளன. அவை...* ஒரு நபர் ஒரே நேரத்தில், இரு தொகுதிகளில் நிற்கக்கூடாது-* தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., - எம்.எல்.ஏ., பதவிக்காலத்தில் இறந்து விட்டால், இடைத்தேர்தல் வைக்காமல், இறந்த எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,வின் கட்சியே வேறொரு உறுப்பினரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்* தேர்தலில், 100 சதவீத கட்டாய வாக்குபதிவு- நடத்த வேண்டும்* கட்சிகள், தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவிக்க கூடாது-* ஒரு கட்சி தேர்தலில் வாங்கும் ஓட்டு சதவீதத்தை வைத்து விகிதாசார பிரதிநிதித்துவம் கொண்டு வருதல்-, ஊழல் செய்யும் எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,யை திரும்ப அழைப்பது போன்ற சீர்திருத்தங்கள் தேவை. மத்திய அரசு நினைத்தால் இவற்றை செய்து விடலாம்.ஆனால், உன் மகன் நினைக்கிற மாதிரி, தேர்தல் சீர்திருத்தங்களை அவ்வளவு எளிதில் கொண்டு வர முடியாது. இருகட்சி தேர்தல் முறையோ, அமெரிக்க அதிபர் போன்ற, அதிகாரத்துடன் கூடிய பதவியோ இந்தியாவில் சாத்தியமில்லை. வெகுஜன ஊடகங்கள் மூலம், 92 கோடி வாக்காளர்களின் மனதை வென்றெடுப்பது குதிரை முட்டை. அதை, இன்னும், 20 ஆண்டுகளில் நிறைவேற்றுவேன் என்பது நடக்கக் கூடிய செயலாகப் படவில்லை.இந்திய அரசியலில், ஒரு கட்சியின் தலைவராக இருக்கவே, ஆயிரம் கழைக்கூத்தாடி வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. இந்திய அரசின் தலைமை பதவிக்கு வர விரும்பும் ஒருவர், மத, இன, மொழி மற்றும் பிராந்திய அரசியல் செய்யும் வலிமை கொண்டிருக்க வேண்டும்.உன் மகன், இந்திய அதிபர் ஆகாவிட்டால் என்ன... நல்லதொரு அரசியல் விமர்சகராக பரிமளிப்பான் அல்லது முக்கிய அரசியல் கட்சிக்கு ஆலோசகராக மாறுவான்; அரசியல் எப்படியும் அவனுக்கு சோறு போடும்.மேனுவல் வாக்குசீட்டு சிறந்ததா... மின்னனு இயந்திரம் மூலம் வாக்களிப்பது சிறந்ததா என, உன் மகனிடம் கேட்டு சொல்லேன்.அரசியல் பழத்தை தின்று கொட்டை போட்டுக் கொண்டிருக்கும் உன் மகன் மேலும் மிளிர வாழ்த்துகள்.- அன்புடன், பிளாரன்ஸ்.