இளஸ் மனஸ்! (153)
அன்பு ஆன்டிக்கு...என் வயது, 10; வீட்டருகே வசிக்கும் என் வயதுள்ள சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடுவேன். எங்கள் வீடு, ஐந்து ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. வாசல் கதவு, தேக்கு மரத்தால் செய்யப்பட்டது. கதவுகளில், சாமி சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அந்த கதவின் மீது நண்பர்களுடன் ஏறி, பேருந்து ஓட்டுவது போல் விளையாடுவேன். கதவு தாழ்பாளை, 'டபார்... டபார்...' என அடித்து சப்தம் ஏற்படுத்தி மகிழ்வேன். என் அம்மா, 'கதவையும், தாழ்பாளையும் ஆட்டாதீங்க... வீட்டுல சண்டை வரும்...' என கோபத்தில் கத்தி விரட்டுவார். இதுபோல் பேசுவது மூட நம்பிக்கையாக இல்லையா... அன்றாடம் பல மூட நம்பிக்கைகளை கைகொண்டு வருகிறார் அம்மா. இது போன்ற சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. உங்க கருத்தை சொல்லி தெளிவு படுத்துங்க ஆன்டி.- இப்படிக்கு, வ.பாரத்.அன்பு மகனுக்கு...பெரியவர்கள் கூறும் அறிவுரை வார்த்தைகள், மேம்போக்காய் மூட நம்பிக்கை போல் தெரியும். ஆனால், உண்மையில் உள்ளர்த்தமாய், அறிவுப்பூர்வமான விஷயங்கள் மறைந்திருக்கும். அப்படிப்பட்ட சில விஷயங்களை பார்ப்போம்...வீட்டில் புறா வளர்த்தால் குடும்பம் அழிந்து விடும்: இதில் புதைந்துள்ள அர்த்தம், புறாக்கழிவு, விஷப் பாம்புகளை ஈர்க்கும். பாம்பு கடி படாமல் இருக்க, புறா வளர்க்காதே என்பதே அதன் பொருள்.நகம் கடித்தால் தரித்திரம்: கடித்து கண்ட இடத்தில் போடும் முரட்டு நகங்கள், கால்களை குத்தி விட வாய்ப்பு உண்டு. நகம் கடிக்கும் போது அதில் உள்ள அழுக்கு, வாய்க்குள் போய், வியாதிகளை பரிசளிக்கும் என்பதன் மறைமுகமாக எச்சரிக்கை.உச்சி வேளையில் கிணற்றை எட்டி பார்க்காதே: உச்சி வேளையில், சூரிய வெளிச்சம், நேரடியாக கிணற்று நீரில் பட்டு, விஷவாயு மேலே வரும் என, பூடகமாக உணர்த்துவதாகும்.இருட்டிய பின், குப்பையை வெளியில் கொட்டாதே: அதாவது, வீட்டில் தவற விட்ட நகையை குப்பையுடன் சேர்த்து கூட்டி, வெளியில் கொட்டிவிட வாய்ப்பு ஏற்படும். அதை தேடி கண்டுபிடிக்க முடியாது என்பதே இதன் பொருள்.இரவில் கீரை சாப்பிடுவது எமனை அழைப்பதற்கு சமம்: இரவில் சாப்பிடும் கீரை எளிதில் செரிக்காது; வயிற்று உபாதைகள் மிகும் என்பதே இதன் பொருள்.புளியமரத்துக்கு அடியில் படுத்தால் பேய் அடிக்கும்: இரவில், புளிய மரம் அதிக கார்பன்டை ஆக்சைடை வெளியிடும். அதனால், மூச்சு திணறல் ஏற்படும். மூச்சு திணறல் ஏற்படுவதை, அமுக்குவான் பிசாசு என்பர். இது போன்ற எச்சரிக்கைகள், பயமுறுத்தலாய், மூட நம்பிக்கையாய் தெரியும். ஆனால், உண்மையில் வாழ்க்கைக்கு பயனுள்ளவை என புரிந்திருப்பாய்.உன் அம்மா, 'கதவையும், தாழ்பாளையும் ஆட்டாதே சண்டை வரும்' என கூறுவதில், பல விஷயங்கள் ஒளிந்திருக்கின்றன.அதிக செலவில் உருவாக்கிய தேக்கு மர கதவு உடைந்தால், அதை சரி செய்யும் செலவை ஈடுகட்ட முடியாமல், உன் பெற்றோருக்குள் சண்டை வர வாய்ப்பு உண்டு. தாழ்பாளை ஆட்டும் சத்தம் கொடூரமாக இருக்கும்; அது குடும்பத்தில் மற்றவர்கள் காது ஜவ்வை கிழித்து, மன அமைதியை குலைக்கும்.உன் விளையாட்டால், கதவு பலவீனமாகி விட்டால், இரவில் திருடர்கள் புகுந்துவிட வாய்ப்பு ஏற்படும். எனவே, திடலில் அல்லது மைதானத்தில் விளையாடுங்கள்.அறிவார்ந்த எச்சரிக்கைகளை புரிந்து வாழ கற்றுக்கொள் மகனே!- அன்புடன், பிளாரன்ஸ்.