உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்... (71)

அன்பு பிளாரன்ஸ்...கணவருடன் பன்னாட்டு நிறுவனத்தில், மென்பொருள் பொறியாளராக பணிபுரிகிறேன். காதல் திருமணம் செய்து கொண்டோம்; ஆண் குழந்தைக்கு, ஒரு வயதாகிறது. மகனுக்கு, எப்போதும், மூக்கு ஒழுகுகிறது; வயிற்றுப் போக்கு அடிக்கடி இருக்கிறது; வயிற்றை சுற்றியும், காது மடல்களையும், சொறிந்தபடியே இருக்கிறான்.முதுகு, வயிறு மற்றும் தொடையில் சிவப்பு நிற தடிப்புகள் பூத்துள்ளன. கண்கள், செக்கச்செவேல் என்று சிவந்துள்ளன; அடிக்கடி தும்முகிறான்.குழந்தை நல மருத்துவரிடம் காட்டினோம்; சில சிரப்புகள் கொடுத்தார்; குணமாகவில்லை; என்ன செய்யலாம். நல்ல தீர்வு சொல்ல வேண்டுகிறேன்.அன்புமிக்க அம்மா...மகனுக்கு, 'அலர்ஜி' எனப்படும் ஒவ்வாமை இருக்கலாம் என கணிக்கிறேன்; அயற் பொருள் ஒன்றை உட்கொள்வதால், தொடுவதால், வாசிப்பதால், உடல் நலத்திற்கு கெடுதல் ஏற்படும் பிணி நிலையையே, ஒவ்வாமை என்பர். ரத்த ஓட்டத்திற்குள் அந்நிய பொருட்கள் புகுந்து விட்டால், உடனே, 'ஹிஸ்டமைன்' எனும் பொருளை சுரக்கும் உடல். அது செய்யும் அலங்கோலங்களே ஒவ்வாமை எனப்படுகிறது.ஒவ்வாமை பல வகைப்படும். அவை:* தோல் ஒவ்வாமை * துாசி ஒவ்வாமை* பூச்சி கடி ஒவ்வாமை* வளர்ப்பு பிராணி ஒவ்வாமை* கண் ஒவ்வாமை* மருந்து ஒவ்வாமை* கரப்பான் பூச்சி ஒவ்வாமைகுழந்தைகள், வீட்டுக்கு வெளியே விளையாடும் போது, பூவிலிருந்து உதிரும் மகரந்த துாள் பட்டு, ஒவ்வாமை வரலாம். சிகரெட் புகை, வாசனை திரவியங்கள், காரின் புகை கூட, குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தலாம். எந்த குழந்தைக்கு வேண்டுமானாலும் ஒவ்வாமை வரலாம். மரபியல் ரீதியாகவும் வரக்கூடும்.உலகில், உணவு ஒவ்வாமை-யால், 5 சதவீத குழந்தைகள் ஆண்டுதோறும் பாதிக்கப்படுவதாக, சர்வதேச புள்ளி விவரம் கூறுகிறது.உன் குழந்தையை தோல் மருத்துவரிடம் அழைத்துச் செல்; பல விதமான அலர்ஜி பரிசோதனைகளை நடத்தி, பிரச்னைக்கான காரணத்தை அறிவார். ரத்த பரிசோதனை மூலமும் கண்டுபிடிக்க முயல்வார். குழந்தையின் உணவு பொருட்களை, 15 நாட்கள் கண்காணித்து, ஒவ்வாமையின் காரணத்தை கண்டுபிடிப்பார்.ஒவ்வாமை நீடித்தால் பல நோய்கள் வரக்கூடும். கீழ்க்கண்ட விதங்களில் சிகிச்சை தரலாம்.* வளர்ப்பு விலங்கால் அலர்ஜியா... குறிப்பிட்ட உணவால் அலர்ஜியா என கண்டறிந்து, குழந்தையிடமிருந்து விலக்கலாம்* 'ஆன்டி ஹிஸ்டமைன்' மருந்து கொடுக்கலாம்* 'நேசகார்ட்' போன்ற ஸ்டிராய்டு ஸ்ப்ரேக்களை உபயோகிக்கலாம்* பெனடிரில் சிரப் கொடுக்கலாம்* செட்ரசைன், அலிஜிரா, லோரடடைன் கிளாரினெக்ஸ் போன்ற மருந்துகள் கொடுக்கலாம்.இவை எல்லாம், மருத்துவரின் பரிந்துரையால் மட்டுமே கொடுக்க வேண்டும்.அதிர்ச்சியில், ரத்த அழுத்தம் குறைந்தால், 'எபிநெப்ரின்' என்ற மருத்தை ஊசி மூலம் ஏற்றுவர். கீழ் குறிப்பிடும் ஆலோசனைகளை கடைபிடிக்க முயற்சிக்கலாம்.* குழந்தைக்ககான படுக்கையை, துாசி இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்* வீட்டில், நாய், பூனை வளர்க்க வேண்டாம்* பருத்தி ஆடைகள் மட்டும் உடுத்தலாம்* புட்டிப்பால் புகட்டும் போது, குழந்தையின் காதுக்குள் புகுந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்* குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும், எவ்வித உணவையும் நீங்களும் உண்ண வேண்டாம்* ரசாயன பூச்சு உடைய பொம்மைகளை விளையாட கொடுக்க வேண்டாம்* கணவர் சிகரெட் புகைப்பவராக இருந்தால், உடனடியாக நிறுத்தவும்* பணிக்கு, மூன்று மாதம் விடுப்பு போட்டு குழந்தையை கவனிக்கவும்* துாசி, புகையிலிருந்து விலகியிருக்கவும்.இவை எல்லாம், அலர்ஜி நோயிலிருந்து தப்பும் வழிமுறைகள். இவற்றை கடைபிடித்து, குழந்தையை சிறப்பாக வளர்க்க வாழ்த்துகிறேன்.- பிராத்தனைகளுடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !