அன்பை பரிசளிப்போம்!
மானுடத்தை வாழ வைக்கும் ஒரே மந்திரம் அன்பு. மனிதர்களிடம் மட்டுமல்லாது பிற உயிரினங்களிடமும் அன்பு செலுத்த வேண்டியது கட்டாயம். அதைத்தான் அறிவுறுத்துகிறது கிறிஸ்துமஸ் பண்டிகை. * கிறிஸ்துமஸ் தினத்தில் மரத்தை அலங்கரித்து காட்சிப்படுத்தும் வழக்கத்தை துவங்கியவர், கிறிஸ்தவ மதத்தில் சீர்திருத்தம் செய்த மார்டின் லுாதர் * அலைபேசி, மின்னஞ்சல் தொழில் நுட்பம் வரும் முன், கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை முக்கிய இடம் பிடித்திருந்தது. முதன்முதலாக கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை, கி.பி.,1834-ல் வெளியானது. ஐரோப்பிய நாடான இங்கிலாந்தை சேர்ந்த சர்ஹென் கோல் என்பவர், நண்பருக்காக தயார் செய்திருந்தார். அது அட்டையில் அச்சிடப்பட்டிருந்தது. வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கம் பின்னர் உலகெங்கும் பிரபலமானது* கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, 'கேரல் சர்வீஸ்' என்ற நிகழ்ச்சி மிகவும் பிரசித்தம். குழுவாக இணைந்து இசை நிகழ்ச்சி நடத்துவர். குழந்தை இயேசுவை வாழ்த்தி பாடுவர். ஐரோப்பிய நாடான பிரான்சில் கி.பி., 1847-ல் இது துவங்கியதாக கூறப்படுகிறது.மெழுகுவர்த்தி!எகிப்தியர்கள், கடவுள் வணக்கத்தின் போது, மெழுகுவர்த்தி ஏற்றுவதை வழக்கமாக வைத்திருந்தனர். தீப வழிபாடு இறை அருளை பெற்றுத் தரும் என்பதால், பிறந்த நாள், 'கேக்'கிலும் மெழுகுவர்த்தி ஏற்றும் பழக்கம் ஏற்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையிலும் தீபம் ஏற்றுவது வழக்கமாக உள்ளது.கிறிஸ்துமஸ் தீவு!இங்கிலாந்து, கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றிய மாலுமி வில்லியம் மைனர்ஸ். இவர், ராயல்மேரி என்ற கப்பலை கி.பி., 1643ல் ஓட்டிச்சென்றார். வழியில் ஒரு தீவை கண்டறிந்தார். அன்றைய தினம், கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால், அதற்கு கிறிஸ்துமஸ் தீவு என பெயரிட்டார். அது, இந்தியப் பெருங்கடலில் உள்ளது. ஆஸ்திரேலியா, பெர்த் நகரிலிருந்து, 2,600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சான்டா கிளாஸ்!கிறிஸ்துமஸ் தினத்திற்கு முதல் நாள் இரவு வருவார் கிறிஸ்துமஸ் தாத்தா. ஐரோப்பாவில் சான்டா கிளாஸ் என்பர். இவர் பரிசுகளை அள்ளி தந்து, பிரதிபலனாக அன்பை பெறுவார்.சுயநலம் மங்கி அன்பும், அக்கறையும் பெருக வேண்டும். அன்பை பரிசளித்து வாழ்வோம் என்பதே தாத்தாவின் செய்தி!- பாலாஜி