உள்ளூர் செய்திகள்

அன்பும் நெகிழ்வும்!

திருச்சி, ஆர்.சி. பள்ளியில், 1971ல், 6ம் வகுப்பு படித்தேன். அன்று பள்ளிக்கு புறப்பட நேரமாகி விட்டது. அவசரமாக குளித்து, கூந்தலை நன்கு துவட்டாமல் மதிய சாப்பாட்டையும் எடுக்காமல் சென்றேன்.மதிய இடைவேளையில் சாப்பாடு எடுத்து வந்திருந்தார் அப்பா. என் ஈர கூந்தலைப் பார்த்ததும், தான் அணிந்திருந்த மேல் துண்டால் துவட்டி விட்டார். இதைப் பார்த்த வகுப்பு தோழியர் ஏளனமாக சிரித்தனர். எனக்கு சங்கடமாகி விட்டது. கோபத்துடன் தந்தையை வீட்டுக்கு போக சொல்லி, வகுப்பறைக்குள் சென்று அமர்ந்தேன்.இதை கவனித்த ஆசிரியை செலின்மேரி, 'இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது... ஈர கூந்தலால், காய்ச்சல் வந்து விடுமே என்ற கவலையில் துவட்டிவிட்டார் அந்த தந்தை. மகள் மீது வைத்திருக்கும் அன்பை அது காட்டுகிறது... ஆத்மார்த்தமாக பாசத்தை பொழிவதற்கு பெற்றோரை தவிர, வேறு எவரும் உலகில் இல்லை...' என அறிவுரைத்து, ஏளனம் செய்தவர்களை கண்டித்தார். தந்தையை கோபித்ததற்காக வருந்தினேன்.எனக்கு, 62 வயதாகிறது. என் தந்தையின் செயலும், அந்த ஆசிரியையின் அறிவுரையும் இன்றும் மனதை நெகிழ வைக்கிறது.- பிரேமா நாகராஜன், திருச்சி.தொடர்புக்கு: 99943 49751


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !