காந்த வில்லை!
'ஐயா தபால்...' குரல் கேட்டதும், வாசலுக்கு ஓடி வந்தாள் லாவண்யா. தபால்காரர் கடிதத்தை தந்ததும் வாங்கி அப்பாவிடம் கொடுத்து, ''தாத்தா என்ன எழுதியிருக்கிறார்...'' என்று கேட்டாள். ''இரு படிக்கிறேன்... தீபாவளி கொண்டாட வருகிறாராம்...'' என்றார் அப்பா.''ஜாலி...''குதித்தபடியே அம்மாவிடம் விஷயத்தை கூறினாள்.லாவண்யாவுக்கு, தாத்தாவை ரொம்ப பிடிக்கும்; ஒன்றாம் வகுப்பு படித்த போது, மிதிவண்டியில் பள்ளிக்கு அழைத்துச் செல்வார்; கதைகள் கூறுவார்.இரவில் தாத்தாவிடம் கதை கேட்டபடிதான் துாங்குவாள். கதை, சில சமயம் சொந்த கற்பனையாகக் கூட இருக்கும். ஒருமுறை, காந்த வில்லை வாங்கித்தர கேட்டு இருந்தாள். ஊரிலிருந்து, 20 காந்த வில்லைகளை வாங்கி வந்தார் தாத்தா.வித விதமாக படங்கள் வரைந்து, அவற்றை குளிர்சாதன பெட்டி, அலமாரி என்று ஒட்டி வைத்திருந்தாள் லாவண்யா. தாத்தா வந்ததும், 'பள்ளியில், போட்டி ஒன்றை அறிவித்து உள்ளனர்; ஒவ்வொரு மாணவியும், ஏதாவது கைவினைப் பொருட்களை செய்து வரணுமாம்; நீங்கள், எனக்கு உதவி செய்றீங்களா...' என்று கேட்டாள்.இருவரும் அந்த வேலையில் இறங்கினர். ஒரு ஆயில் பேப்பரில் விதவிதமான மீன் உருவங்களை வரைந்தனர். அவற்றுக்கு வண்ணம் தீட்டி, தனித்தனியாக வெட்டி, மறுபுறம் காந்த வில்லையை இணைத்தனர்.பின், நீர் நிரம்பிய கண்ணாடி தொட்டியில் மிதக்க விட்டனர். ஒரு ஈர்குச்சியில் காந்தவில்லை ஒன்றை கட்டி, நீரில் கிடந்த மீன் உருவம் அருகே பிடித்தனர். ஒரு மீன், காந்த வில்லையில் ஒட்டியது.இந்த விளையாட்டு உபகரணம் பள்ளி கண்காட்சியில் இரண்டாம் பரிசு பெற்றது. நன்றி தெரிவித்து, பரிசை காண்பித்தாள் லாவண்யா.அன்று மாலை- வீட்டின் கொல்லைப் புறத்தில் தாத்தாவின் குரல் கேட்டு ஓடினாள். கவலையில், 'செல்ல குட்டி... இடுப்பில் செருகியிருந்த சாவிக்கொத்து கிணற்றில் தவறி விழுந்துடுச்சு...' என்றார் தாத்தா. 'இருங்க தாத்தா, வர்றேன்...'வீட்டிற்குள் ஓடினாள் லாவண்யா.ஒரு இரும்பு வாளியும், சிறு கயிறும் எடுத்து வந்தாள். வாளியின் கைபிடியில் கயிறை கட்டி அதற்குள் காந்த வில்லைகளை போட்டாள். வாளியை, மெதுவாக கிணற்றுக்குள் இறக்கினாள். அது தண்ணீருக்குள் மூழ்கியது.கயிறை மெதுவாக சுழற்றியபடி இழுத்தாள். சாவிக்கொத்து, வாளியின் அடியில் ஒட்டியபடி வந்தது. அப்படியே பேத்தியை கட்டியபடி, 'எப்படிடா, இந்த யோசனை தோன்றியது...' என கேட்டார் தாத்தா.'பந்தை குழியில் போட்டு விட்டு, எடுக்க வழி தெரியாமல் திண்டாடிய சிறுவர்களுக்கு நுாதனமாக உதவிய ஒரு கதை சொன்னீங்க... தண்ணீரை குழியில் விட்டதும், பந்து எழுந்து மேலே வந்ததாக சொன்னீங்களே... நினைவில்லையா... அது மாதிரிதான் இதை செய்தேன்...' என்றாள் லாவண்யா. அது தொடர்பான நினைவு அவளை ஆட்கொண்டது. தீபாவளிக்கு தாத்தா வரவை எதிர்பார்த்து காத்திருந்தாள் லாவண்யா.குழந்தைகளே... கூர்ந்த கவனிப்பும், சமயோசித புத்தியும் இருந்தால் சாதிக்கலாம்!