மல்லர் கம்பம்!
பழங்காலத்தில் உடலை வலுவேற்றும் விளையாட்டை, மல்லர் கம்பம் என்பர். ஓய்வு நேரத்தில் பயிற்சி செய்து உடலை வலுவேற்றினர், படை வீரர்கள்.ஆதி மனிதன், மரத்தில் வசித்தபோது, ஏறி, இறங்க பல வழிமுறைகளை கையாண்டான். மனித உருவத்தை, மரம் மற்றும் கல்லில் வடித்து, மல்லுக்கட்டி பயிற்சி மேற்கொண்டான். அந்த வகையில் இந்த விளையாட்டுக்கும், மல்லர் கம்பம் என்ற பெயர் உண்டானது.உரலில், குழவி சுற்றுவது போல், கம்பு செயல்பட்டால், அது சிலம்பம் விளையாட்டு. குழவி நிலைத்து நிற்க, உரல் சுற்றுவதுபோல செயல்பட்டால் அது, மல்லர் கம்பம் எனப்படும்.பண்டை காலத்தில் தமிழகத்தை ஆண்ட சோழர், பல்லவர் இந்த விளையாட்டை போற்றி பாதுகாத்தனர். அவர்கள் அவையில், சிறந்த மல்லர்கள் இருந்ததற்கு குறிப்புகள் உள்ளன.மல்யுத்தத்தில் சிறந்து விளங்கியவர் முதலாம் நரசிம்ம வர்ம பல்லவன். அவர், 'மாமல்லன்' என பெருமையுடன் அழைக்கப்பட்டார். இவருக்கு, மல்லர் கம்பத்திலும் சிறந்த பயிற்சி இருந்தது.களரி, மல்யுத்தம், பிடிவரிசை, வர்மம் போன்ற தற்காப்புக் கலைகளும், மல்லர் கம்பம் போல் தமிழகத்தின் தன்னிகரற்ற விளையாட்டுகளாக திகழ்ந்தன.மன்னர்களிடம் ஒற்றராக பணிபுரிந்தோர், மல்யுத்த வீரர்கள் மட்டுமே இக்கலையை அறிந்திருந்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் தாதா தியோதர். இவர், 18ம் நுாற்றாண்டில் இவ்விளையாட்டுக்கு புத்துயிர் அளித்தார். மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் இது பிரபலமாக உள்ளது.மகாராஷ்டிராவில், எந்த விழாவிலும், இறை வணக்கத்திற்கு பின், ஐந்து நிமிடங்கள் மல்லர் பயிற்சி நடத்துவது வழக்கமாக உள்ளது. தமிழகத்தில், இக்கலை பயிற்சி அரிதாகி வருகிறது. உரியடி விளையாட்டிற்கு பயன்படுத்தும் வழுக்கு மரம், அக்காலத்தில் சோழர் விளையாடிய மல்லர் கம்பத்தின் மறு உருவம். எண்ணெய் தடவிய வழுக்கு மர உச்சியில் ஏறுவதும் இத்தகைய பயிற்சி முறையை ஒட்டியது தான். நிலைக்கம்பம், தொங்கு கம்பம், கயிறு விளையாட்டு எனவும் இது அழைக்கப்படுகிறது.மல்லர் கம்பத்தில் எண்ணெய் தடவி, கயிற்றில் தொங்கி, வீர தீர விளையாட்டுகள், ஆசனங்கள் செய்து பழகும் வழக்கமும் இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தது. - வ.முருகன்