உள்ளூர் செய்திகள்

உ.பி.,க்கு புது விளக்கம்!

மதுரை, சேதுபதி உயர்நிலைப் பள்ளியில், 1966ல், 8ம் வகுப்பு படித்தபோது வகுப்பு ஆசிரியர் நாகநாத ஐயர்; மிகவும் நன்றாக பாடம் நடத்துவார்; அவ்வப்போது, நல் அறிவுரைகளும் கூறுவார்.ஒரு நாள், வகுப்புக்கு தாமதமாகச் சென்ற என்னிடம், 'ஏன் லேட்...' என கேட்டார். 'அம்மா பொறுமையாக சாப்பிட சொன்னதால், தாமதம் ஆகிடுச்சு ஐயா...' என்றேன்.தலையை ஆட்டியபடி, 'இனிமே இதுபோல் வராதே...' என அறிவுரையும் கூறினார்.மறு வாரத்தில் ஒருநாள் தாமதமாக சென்றபோது, 'இன்னைக்கு என்ன காரணம்...' என்று விசாரித்தார். தயங்கியபடி, 'பக்கத்து வீட்டு தாத்தாவுக்கு, செய்திதாள் படிச்சுக் காட்டிட்டு, பள்ளிக்குப் போன்னு அப்பா சொன்னார். அதான்...' என்றேன். சிரித்தபடியே, 'போன வாரம் மத்தியபிரதேசம்... இந்த வாரம் உத்திரபிரதேசமா... சரி, சரி உட்காரு...' என்றார்.அன்று மாலை பள்ளி விட்டதும் ஓட்டமும், நடையுமாய் சென்று, 'ஐயா... மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம்ன்னு சொன்னீங்களே... அதன் அர்த்தம் என்ன...' என்றேன். நிதானமாக, 'மத்தியபிரதேசம் என்றால் வயிறு; உத்திரபிரதேசம் என்றால் மூளை; உன் அம்மா, வயிறு வாடக்கூடாதுன்னு நினைக்கிறாங்க; பேப்பர் படிக்கிறதுனால அறிவு வளரணும்ன்னு நினைக்கிறாரு அப்பா... இப்போ புரிஞ்சுதா...' என்று விளக்கினார். தலையை மேலும் கீழும் ஆட்டி, மலர்ந்த முகத்துடன் விடை பெற்றேன்.தற்போது, என் வயது, 68; வட மாநிலச் செய்திகளை படிக்கும் போதெல்லாம், அந்த அறிவார்ந்த ஆசிரியரை மனத்திரையில் காண்கிறேன்.- கே.கணேசன், மதுரை.தொடர்புக்கு: 95669 70182


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !