உள்ளூர் செய்திகள்

ரெயின் டீச்சர்!

என் வயது 60. 1970ம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்களின் அறிவியல் ஆசிரியர், முன் பெஞ்சு அருகே வந்து எப்போதும் சத்தமாக பாடம் நடத்துவார்.பாடம் நடத்தும்போது அவர் வாயிலிருந்து எச்சில் தெறிக்கும். அது முன் பெஞ்சில் இருக்கும் மாணவர்களின் மேல் அடிக்கடி படும். இதற்கு பயந்தே, அறிவியல் வகுப்பு ஆரம்பம் என்றாலே நாங்கள், முன் பெஞ்சிலிருந்து பின் பெஞ்சுக்கு சென்று நெருக்கியடித்து அமர்ந்து கொள்வோம். எனவே, அறிவியல் வகுப்பு வந்தாலே முன் பெஞ்சு காலியாகிவிடும். நாங்களும் அறிவியல் ஆசிரியருக்கு செல்லமாக, 'ரெயின் டீச்சர்' என்ற பட்டப்பெயர் வைத்துவிட்டோம்.ஒருநாள் அறிவியல் வகுப்பு வேளை வரவும் வழக்கம்போல், முன் பெஞ்சு காலியாவிட்டது. அன்று அறிவியல் ஆசிரியருக்கு பதில், தலைமையாசிரியர் வந்து, 'இப்போது என்ன வகுப்பு? யார் ஆசிரியர்?' என கேட்டார்.'இப்போது அறிவியல் வகுப்பு சார்' என்று ஆசிரியர் பெயரையும் கூறினோம்.'அவர் இன்று விடுப்பு. எனவே, நீங்கள் அமைதியாக அறிவியல் புத்தகத்தை எடுத்து படியுங்கள். ஏன் முன் பெஞ்சு காலியாக உள்ளது. முன்பெஞ்சில் உள்ளவர்கள் வகுப்புக்கு வரவில்லையா?' எனக் கேட்டார் தலைமையாசிரியர்.'சார் அறிவியல் வகுப்பு ஆசிரியர் பாடம் நடத்தும்போது எச்சில் தெறிக்கும். அதனால் அந்த வகுப்பு வரும்போது பின் பெஞ்சுக்கு வந்து விடுவோம்' என்று தயக்கத்துடன் கூறினோம்.அப்போது ஒரு குறும்புக்கார மாணவன், 'அதனால் நாங்கள் அவருக்கு, 'ரெயின் டீச்சர்!' என்ற பட்டப்பெயரும் வைத்துவிட்டோம்!' என்றான்.இதைக்கேட்டதும், கோபம் கொள்வார் என்று நினைத்தோம். ஆனால், பலமாக சிரித்து விட்டார் தலைமை ஆசிரியர்.இந்நிகழ்வை இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.-வெ.பரமசிவன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !