உள்ளூர் செய்திகள்

முனிவரின் சாபம்!

முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் ரிஷி ஒருவர் வாழ்ந்து வந்தார். அக்காட்டில் வசிக்கக் கூடிய மிகப் பெரிய விலங்குகளான சிங்கம், புலி, கரடி, யானை, பாம்பு போன்றவை மிக சாதாரணமாக அவர் அருகில் வருவதும், போவதுமாக இருந்தன. அவ்விலங்குகளின் மொழியைக் கூட அவர் அறிந்திருந்தார்.ஒருநாள்-பக்கத்து கிராமத்தில் இருந்து ஒரு நாய், முனிவரின் ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தது. அங்கு வந்த பிறகு ஏனோ திரும்ப ஊருக்கு போக அதற்கு மனம் வரவில்லை. முனிவரின் அருகிலேயே எப்போதும் படுத்துக் கொண்டிருந்தது.மற்றொரு நாள்- சிறுத்தை ஒன்று அந்த நாயைக் கொல்ல வந்தது. உடனே, நாய் முனிவரின் அருகில் ஓடிப்போய் நின்றது. அச்சிறுத்தையிடமிருந்து தன்னைக் காப்பாற்றும்படி முனிவரிடம் வேண்டியது.முனிவர் அந்த நாயின் பயத்தைப் போக்க எண்ணி, அதையும் ஒரு சிறுத்தையாக மாற்றி விட்டார். அதன் பின் சிறுத்தை பற்றிய கவலை சிறிதுமின்றி தானும் ஒரு சிறுத்தையாக உலவி வந்தது நாய்.இந்நிலையில் மிகப் பெரிய புலியொன்று, அச்சிறுத்தையைத் தாக்க வந்தது. சிறுத்தையாக இருந்த நாய் மறுபடியும் ஓடிப் போய் முனிவரின் உதவியை நாடியது. உடனே, முனிவர் சிறுத்தை உருவில் இருந்த நாயை, புலியாக மாற்றி விட்டார்.சில நாட்கள் சென்றன-காட்டு யானை ஒன்று வருவதைக் கண்டது புலி. உடனே, முனிவரிடம் வந்து தன்னையும் ஒரு யானையாக மாற்றும்படி வேண்டியது. முனிவரும் யானையாக உருமாற்றினார்.ஆனால், யானைக்குள் இருந்த நாயின் மனதுக்குள் எப்போதும் போல் பயம் தொடர்ந்து கொண்டே இருந்தது. அது சிங்கத்தைக் கண்டு பயந்தது. உடனே, முனிவர் நாயை சிங்கமாக மாற்றினார்.சிங்கமும் ஒருநாள், சர்ப்பத்தைக் கண்டு நடுங்கியது. உடனே முனிவரும் பிற விலங்குகளையெல்லாம் விட உருவத்தில் மிகப் பெரியதும் பலம் வாய்ந்ததுமான சர்ப்பமாக நாயை மாற்றிக் காட்டினார். சர்ப்பமாக மாறிய நாய், காட்டு விலங்குகள் அனைத்தையும் துன்புறுத்த ஆரம்பித்தது.தன்னை வெல்ல இக்காட்டில் யாரும் இல்லை என்ற எண்ணம் அதற்குள் தலை தூக்க ஆரம்பித்தது.அதனுடைய அட்டகாசம் தாங்காமல் மற்ற மிருகங்கள் அந்தக் காட்டை விட்டே போக ஆரம்பித்தன. அந்தக் காட்சியைக் கண்ட சர்ப்பம் உருவில் இருந்த நாய்க்கு ஒரு எண்ணம் தோன்றியது.'எல்லா விலங்குகளும் என்னைக் கண்டு பயப்படுகின்றன. நான் ஆரம்பத்தில் பயந்து நடுங்கி முனிவரை அணுகியபோது, அவரும் சிறுத்தையில் ஆரம்பித்து தற்போதுள்ள உருவம் வரை மாற்றியிருக்கிறார். அதே போல் மற்ற விலங்குகளும் முனிவரை அணுகி தங்களையும் சர்ப்பமாக மாற்றும்படி கேட்டால் அவரும் மாற்றிவிடுவார். அப்படி ஒரு நிலை வந்தால் எல்லா விலங்குகளும் சர்ப்பங்களாகி விடும்.பிறகு, எந்த விலங்கும் என்னைக் கண்டு பயப்படாது. அப்படி பயப்படாவிட்டால் என்னுடைய மதிப்பு என்னாவது என்று யோசித்த சர்ப்பம், முனிவர் உயிருடன் இருந்தால்தானே அவரை விலங்குகள் அணுக முடியும். அவரையே கொன்று விட்டால் எந்த விலங்கும் சர்ப்பமாக முடியாது என்று யோசித்தபடி முனிவரின் அருகே சென்றது.சர்ப்பத்தைப் பார்த்ததும், தவ வலிமை மிக்க அம்முனிவர் அதனுடைய எண்ணத்தைப் புரிந்து கொண்டார். 'வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைக்கப்பார்க்கிறாயா?' என்று நினைத்த முனிவர் ''நீ நாயாகக் கடவது!'' என்று சபித்தார்.ஒடுங்கி நடுங்கியபடி நின்ற அந்த நாயை பார்த்து முனிவர் சொன்னார். எல்லா விலங்குகளிடமும் பயந்து கொண்டிருந்த உன் மீது அனுதாபம் காட்டி சிறுத்தையாகவும், புலியாகவும், யானையாகவும் சிங்கமாகவும் கடைசியில் சர்ப்பமாகவும் மாற்றினேன்.இப்படி வெவ்வெறு விலங்குகளின் உருவம் உனக்கு வந்தாலும் அவ்விலங்குகளின் வீரமும், பலமும் உனக்கில்லை. ஆனால், மனசுக்குள் நீ நாயாகவே இருந்தாய். கடைசியில் பிற விலங்குகளைப் பார்த்து பயந்து என்னைக் கொல்வதற்கு முயன்றாய். நீ செய் நன்றி மறந்த துரோகி.''நீ எப்போதும் போல் நாயாக இருப்பது தான் சரி. அதுதான் உனக்குத் தகுதியும் கூட. இங்கிருந்து போய் விடு. என் கண்ணெதிரில் நிற்காதே,'' என்று விரட்டி விட்டார்.காட்டை விட்டே ஓடிப் போனது நாய்.நன்றி மறப்பது நன்றன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !