உள்ளூர் செய்திகள்

போட்டி!

ராமுவும், சோமுவும் நண்பர்கள். பக்கத்து வீட்டில் வசித்தனர். ஒரே பள்ளியில், 10ம் வகுப்பு படித்தனர்.எப்போதும் முதல், 'ரேங்க்' வாங்குவான் ராமு. இரண்டாம் தரவரிசையில் இருப்பான் சோமு. எவ்வளவோ முயற்சித்தும் ராமுவை முந்த முடியவில்லை.பள்ளியில் திருப்புதல் தேர்வு துவங்க இருந்தது. அதில் முதல், 'ரேங்க்' வாங்குபவருக்கு, 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.''தேர்வில் ஒரு மாற்றம் இருக்கிறது; கவனமாக படியுங்கள்...'' என்றார் வகுப்பாசிரியர்.ராமுவுக்கு சுகவீனம் ஏற்பட்டிருந்ததால் சில நாட்களாக பள்ளிக்கு வரவில்லை.அன்று, ''தேர்வு கால அட்டவணை சொல்றேன். எழுதி வெச்சுக்கோங்க; வழக்கத்துக்கு மாறாக இம்முறை முதலில் கணக்கு தேர்வு; மூன்றாவது ஆங்கிலம்...' என அறிவித்தார் வகுப்பு ஆசிரியர்.ராமு விடுப்பில் இருந்தான். அதனால், ''ராமுவிடம் சொல்லி விடு...'' என அறிவுறுத்தினார் வகுப்பாசிரியர்.''சொல்றேன்...'' என்றான் சோமு.தகவலை ராமுவிடம் சொல்லாமல் மறைக்க முடிவு செய்தான் சோமு. தேர்வில் அவன் கலந்து கொள்ளாவிட்டால் நாம் தான் முதல், 'ரேங்க்' பரிசு, 1 லட்சம்' என எண்ணி திட்டமிட்டான்.பக்கத்து தெருவில் இருந்தது சோமு வீடு. காலை, 9:00 மணிக்கு அலுவலகம் செல்வார் அவன் அப்பா. அவன் அம்மாவுடன் சனிக்கிழமை காலை, 10:00 மணிக்கு மருத்துவமனை செல்வான் என, தெரிந்திருந்தான்.பின் அவன் வீட்டில் காது கேட்காத பாட்டி தான் இருப்பார்.சோமுவின் அம்மா, சில மாம்பழங்களை ராமு வீட்டில் கொடுக்க சொன்னாள்.அன்று காலை, 10:15 மணிக்கு ராமு வீட்டுக்கு சென்றான் சோமு.''அம்மாவோடு மருத்துவமனை சென்றிருக்கான் ராமு; என்ன விஷயம்...'' என்றார் காதுகேளாத பாட்டி.மாம்பழங்களை அவரிடம் கொடுத்த சோமு, ''பாட்டி... ராமுவிற்கு திங்கள் கிழமை கணக்கு தேர்வு, புதன் அன்று, ஆங்கில தேர்வு...'' என மெல்ல கூறினான் சோமு.அது காதில் விழாததால், ''பழம் மிகவும் நல்லா இருக்கு. வேற ஒன்றும் இல்லையே...'' என்றாள் பாட்டி.''எதுவும் இல்லை. நான் புறப்படுகிறேன்...'' சென்றான் சோமு.திங்கள் கிழமை -''சோமு... ஏன் எல்லாரும் கணக்கு போட்டு பார்க்குறாங்க...'' என்று கேட்டான் ராமு.முகத்தில் அப்பாவிதனத்தை வரவழைத்த சோமு, ''ஐயோ... நான் பாட்டியிடம் சொன்னேனே... இன்னிக்கு கணக்கு தேர்வு; உன்னிடம் சொல்லலையா...'' என்றான்.''பாட்டிக்கு தான் காது கேட்காதே... எனக்கு அலைபேசியில் சொல்லியிருக்கலாமே...'' என்றான் ராமு.''மன்னிச்சிருடா... பாட்டி உன்னிடம் சொல்லி இருப்பாங்கன்னு நினைச்சுட்டேன்...'' ராமுவின் முகத்தில் இருள் படர்ந்தது. கணித தேர்வை எழுதி முடித்தான். எல்லா தேர்வும் முடிந்தது.அன்று மதிப்பெண் பட்டியலை வெளியிட்டார் தலைமையாசிரியர்.''இந்த தேர்வில் இருவர் முதல், 'ரேங்க்' எடுத்துள்ளனர்; ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர்; அதில், ஒரு மாணவன் சோமு...'' என்றார்.எல்லாரும் கை தட்டினர்; தலைமையாசிரியர் தொடர்ந்தார்.''மற்றொரு மாணவன், எப்போதும் முதல் இடத்தை பிடிக்கும் ராமு தான்...''தலைமை ஆசிரியரை ஆச்சர்யமாக பார்த்தான் சோமு.''நாங்க யாருக்கு, 1 லட்சம் கொடுப்பது என, குழப்பத்தில் இருந்தோம். இறுதியில் கணக்கு விடைத்தாளை பார்த்தவுடன் முடிவு கிடைத்தது; இருவரும் கணக்கில், 100 மதிப்பெண் வாங்கியிருந்தாலும், ராமு, 130 வாங்கியிருக்கான். 'சாய்ஸ்' விட்ட கணக்கை போட்டால் மதிப்பெண் உண்டு என அறிவித்தோம்; அதன்படி, ராமு கணக்கில், 100 என்றாலும் வாங்கிய மதிப்பெண், 130; ரொக்கப் பரிசு ராமுவுக்கே, என முடிவு செய்தோம்...'' என்றார்.''ஐயா... நான் ஒன்று கூற ஆசைப்படுகிறேன்...'' என்றான் ராமு.''சொல்லுப்பா...'' ''பாடம் கற்பித்தது மட்டுமின்றி, எங்களை எப்படி படிக்க வேண்டும் என்று சொல்லியது போல், தினமும் படித்ததால் தான், ஆங்கில தேர்வு என்று வந்த நான், கணக்கு தேர்வை எழுதி இந்த மதிப்பெண்ணை வாங்கியிருக்கேன்... நான் பல பரிசுகளை வாங்கியிருப்பதால் ரொக்கப் பரிசை, 50 ஆயிரம் ரூபாய் வீதம் பிரித்து கொடுக்க கேட்டுக் கொள்கிறேன்...'' என்றான் ராமு.''நீ தேர்ச்சி பெற்றது மதிப்பெண்ணில் மட்டுமல்ல, வாழ்க்கை பாடத்திலும் முதல், 'ரேங்க்' வாங்கியுள்ளாய்...''உன் ஆசைப்படி பரிசை உனக்கும், சோமுவுக்கும் பகிர்ந்து அளிக்கிறேன்...'' என்றார் தலைமையாசிரியர்.கைதட்டல் விண்ணை பிளந்தது.பொறாமை எண்ணத்தை கைவிட்டான் சோமு.குழந்தைகளே... எந்த செயலிலும் முழு கவனமும், ஈடுபாடும் இருந்தால், வாழ்க்கையில் வெற்றி பெறலாம்!- வி.ரவிச்சந்திரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !