எல்லா உயிரும்!
கோவை மாவட்டம், வெள்ளமடை கிராமம், காளிபாளையம் ஆரம்ப பாடசாலையில், 1958ல், 4ம் வகுப்பு படித்த போது, ஆசிரியர் வெங்கடாசலம் தமிழ் பாடம் நடத்தினார். அன்று, 'கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி எல்லா உயிரும் தொழும்' என்ற குறளை முன்வைத்து பேசினார். அதை விளக்கும் வகையில், 'எந்த உயிரினத்தையும் கொல்லாமல் காத்தால் எல்லா உயிரினங்களும் போற்றும்...' என எடுத்து கூறினார். அத்துடன், 'விலங்கு கறியை தின்றால் நாம் இறந்த பின் எமன் சித்தரவதை செய்வார்...' என, கற்பனையாக கதை சொல்லி புரிய வைத்தார். அது மனதில் பதிந்தது. அன்று முதல் மாமிச உணவை தவிர்த்து வருகிறேன். எனக்கு, 78 வயதாகிறது. மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். நற்சிந்தனை, நல்ல அறிவு, நற்பழக்கத்தையும் போதித்து, உயிரினங்கள் மீது பரிவு காட்ட வேண்டும் என போதித்த ஆசிரியர் வெங்கடாசலம் நினைவு நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ளது.- எஸ்.அல்லிராஜ், கோவை. தொடர்புக்கு: 96269 99771