உள்ளூர் செய்திகள்

கலகல....

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, விளக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில், 2006ல், 10ம் வகுப்பு படித்தேன். தமிழாசிரியையாக இருந்த சு.உமா, இலக்கணத்தை மனதில் பதியும்படி தக்க உதாரணங்களுடன் நடத்துவார். தற்கால நிகழ்வுகளை எடுத்துக்காட்டாக கூறுவார். இதனால் அவரது வகுப்பை உற்சாகமாக கவனிப்போம்.அன்று மாதாந்திர தேர்வு வினாத்தாளில், 'இரட்டைக்கிளவி என்றால் என்ன... தக்க உதாரணம் கொடு' என கேள்வி அமைந்திருந்தது. நான் அதற்கான இலக்கண வரையறையை எழுதிய பின், 'கலகல என்பதும் இரட்டை கிளவி, சலசல என்பதும் இரட்டை கிளவி, உண்டல்லோ தமிழில் உண்டல்லோ...' என்ற தமிழ் சினிமா பாடலை எழுதி, 'கலகல' மற்றும் 'சலசல' என்ற சொற்களை அடிக்கோடிட்டு காட்டியிருந்தேன்.தேர்வு முடிந்த பின் வெளியே தோழியருடன் விவாதித்த போது, 'கண்டிப்பாக மதிப்பெண் கிடைக்காது...' என்று வசை பாடினர். அச்சம் நிறைந்த மனதுடன், 'என்ன நடக்குமோ' என காத்திருந்தேன். திருத்திய விடைத்தாளை தந்த போது, 'பொருத்தமாக உதாரணம் எழுதி இருக்கிறாய்...' என பாராட்டி, பரிசாக ஒரு பென்சில் தந்தார் தமிழாசிரியை. இன்றும் அவரது நினைவாக அதை பாதுகாக்கிறேன்.எனக்கு 34 வயதாகிறது. தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றேன். அமெரிக்காவில் வசிக்கும் சிறுவர், சிறுமியருக்கு தமிழ் மொழியை பயிற்றுவித்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் பள்ளி தமிழாசிரியை சு.உமாவை போற்றிய பின்பே, என் வகுப்பை துவங்குகிறேன்.- பு.ஜயகவுரி, அமெரிக்கா.தொடர்புக்கு: 93608 30473


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !