உழைப்பை திருடாதே!
ஆலம்பட்டு கிராமத்தில், வெள்ளையன் என்ற ஏழைச் சிறுவன் வசித்து வந்தான். அவனுக்கு மாம்பழம் சாப்பிடும் ஆசை ஏற்பட்டது. கூலி வேலைக்குச் செல்லும் பெற்றோரிடம் கேட்டான். சாக்கு போக்கு கூறினர் பெற்றோர். ஆனாலும், பெற்றோரை நச்சரித்தான் வெள்ளையன். சலிப்படைந்த பெற்றோர், 'மூன்று வேளை உணவுக்கே, சரியான வேலையின்றி திணறி வருகிறோம். இதில் உனக்கு மாம்பழம் வேண்டுமா...' என அதட்டினர். ஆனாலும், வெள்ளையன் மனதில் அணையா நெருப்பாக மாம்பழ ஆசை நீடித்தது. ஒருநாள் தோட்டம் வழியாக நடந்து சென்றான். அங்கே இருந்த மாமரங்களில், நன்கு பழுத்த பழங்கள் கொத்து, கொத்தாக தொங்கின. அவற்றில் ஒன்றையாவது ருசி பார்க்க விரும்பினான் வெள்ளையன். ஆனால், தோட்டத்துக்குள் தாண்டி குதிக்க முடியாத படி, சுற்றிலும் வேலி போட்டு அடைத்து வைத்திருந்தனர். அதனால், வேலியை பிரித்து உள்ளே நுழைந்தான். எல்லா மரங்களிலும் பழங்கள் தொங்கின. ஆனால், எதுவும் அவன் கைக்கு எட்டாத உயரத்தில் இருந்தன. கீழே கிடந்த கற்களை எடுத்து மாம்பழங்களின் மீது வீசினான். கல் வீசிய சத்தம் கேட்டு, தோட்டத்தில் கட்டியிருந்த நாய் குரைக்கத் துவங்கியது. தோட்டக்காரர் வேகமாக வந்து, கையும் களவுமாக வெள்ளையனை பிடித்து விட்டார். ''யாருடா நீ... மாம்பழம் திருட வந்தாயா...'' கேட்டபடி, மரத்தில் வெள்ளையனை கட்டி வைத்தார். அழுதபடி, ''மன்னித்து விடுங்கள்... தெரியாமல் வந்து விட்டேன். மாம்பழத்தை விலைக்கு வாங்க முடியாத ஏழை நான். இனி மாம்பழமே சாப்பிட மாட்டேன்...'' என, கெஞ்சினான் வெள்ளையன். இதில் மனமிறங்கிய தோட்டக்காரர், கட்டுகளை அவிழ்த்து வெள்ளையனை விடுவித்தார். ''மாம்பழங்களை தருகிறேன். அதற்கு கைமாறாக, இங்கே உள்ள மரங்களுக்கு நீர் பாய்ச்சு... பின் பழங்களை வாங்கிக் கொள்...'' என்றார். அதன்படியே வெள்ளையன் செய்தான். ''அடுத்தவர் உழைப்பை திருடி உண்பது மிகப்பெரிய தவறு. நீயே ஒரு மாஞ்செடியை வைத்து வளர்த்தால், நாளடைவில் பழங்களை தரும். ஆசை தீர சாப்பிடலாம். விற்பனை செய்தும் வருமானம் பெறலாம்...'' என அறிவுரை கூறினார். மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிய வெள்ளையனின் உழைப்புக்கு பரிசாக, மாம்பழங்களையும், மாஞ்செடியையும் அளித்தார் தோட்டக்காரர். அவர் தந்த பரிசை மகிழ்ச்சியாக பெற்றுக் கொண்டான் வெள்ளையன். பெற்றோரிடம் நடந்ததைச் சொல்லி, மாஞ்செடியை வீடு முன் நட்டு, வளர்க்க துவங்கினான். பட்டூஸ்... பொருட்களை மட்டுமல்ல; பிறர் உழைப்பையும் திருடக் கூடாது. யாழ்நிலா