பனி விழும் திகில் வனம்! (22)
முன்கதை: துணிவு மிக்க சிறுமி மிஷ்காவின் தந்தை துருவ் இமயமலையில் ஏறிய போது விபத்தில் இறந்ததாக தகவல் வந்தது. அதை ஏற்க மறுத்து, தந்தையை உயிருடன் மீட்க சென்றாள். எதிர்ப்புகளை மீறி லக்பா என்ற பெண் துணையுடன் சென்ற போது, தவறி பனிக்குகையில் விழுந்தாள் மிஷ்கா. அங்கு பனிக்குள் வாழும் வினோத மனுஷ இனத்தை கண்டாள். அதில் வித்தியாச அனுபங்கள் கிடைத்தன. இனி - ''என்ன சூச்சூ... உன் வாயில் ரத்தம்... பல்லில் எதாவது பிரச்னையா...'' அன்புடன் வினவினாள் மிஷ்கா.'உன்னை பார்ப்பதற்கு முன்தான், ஒரு பனிமானின் மாமிசத்தை தின்றேன். அதில் சொட்டிய ரத்தத்தை தான் நீ பார்க்கிறாய்...' என்றது சூச்சூ.''நீ பொல்லாதவளாயிருக்கே சூச்சூ...'' 'உனக்கு மட்டும் நான் நல்ல தோழி...' ''என்ன பார்த்தவுடன் உனக்கு எப்படி பிடித்தது...'' 'மனிதர்களின் கெட்ட குணங்கள் எதுமில்லாமல் இருக்கிறாய். ஒரு சிலரை நுாறு முறை பார்த்தாலும் பிடிக்காது. உன்னை ஓரக்கண்ணால் பார்த்த போதே பிடித்து விட்டது...' ''பிடிக்கிறது என கூறி, என்னை கடித்து தின்று விட மாட்டாயே...'' 'மாமிசம் சாப்பிடுவது என்பது ஒருவகை உணவு நடைமுறை... அதை சாப்பிடுவோர் சிக்கியதை எல்லாம் தின்று விட மாட்டர்...' சூச்சூவுடன் பேசிக்கொண்டிருந்த போது, 20க்கும் மேற்பட்ட பனிமனுஷக் கூட்டம் வெறித்தனமாக மிஷ்கா மீது பாய்ந்தது.'கழுத்துப்பகுதி எனக்கு...''கால் பகுதி எனக்கு...''நாக்கு எனக்கு...''வயிற்றுப்பகுதி எனக்கு...'நொடி தாமதித்திருந்தால் மிஷ்காவை அக்குவேறாய் ஆணி வேறாய் பிய்த்து போட்டிருக்கும் அந்த கூட்டம். வானம் வெடிக்க கத்தினாள் சூச்சூ.'நிறுத்துங்கள்... உங்கள் கேவலமான விலங்கு நடைமுறையை...' 'இத்தனை நாள் நீ பண்ணியதை தானே இன்று நாங்க பண்ணுகிறோம்...''இவள் என் விருந்தாளி. என் விளையாட்டு பொருள். கடவுள் நமக்கு கொடுத்த பரிசு. இவளை விட்டு விடுங்கள்...''மடிப்பிச்சை கேக்குறியா...''தேவை உங்கள் இரக்கம். அதற்கு என்ன பெயரிட்டாலும் மகிழ்ச்சியடைவேன்..''இவளுடன் ஆசை தீர ஒரு வாரம் பத்து நாள் விளையாடி விட்டு கொடு. அப்புறமாக நாங்கள் தின்று கொள்கிறோம்...''மாட்டேன்... இவள் என் நிரந்தர விருந்தாளி. எட்டி போங்கள்...'சூச்சூ வயதுடைய ஏழெட்டு சிறுமியர் சூழ்ந்து கொண்டனர்.'எங்களுக்கு இவளை பிடித்து விட்டது. நாங்களும் இவளுடன் விளையாடுவோம்...''விளையாடும் சாக்கில் விரல்களை கடித்து விட மாட்டீர்களே...''கடிக்க மாட்டோம். விளையாடும் போது, வாய்க்கு பூட்டு போட்டுக் கொள்கிறோம்...''சரி விளையாடிக் கொள்ளுங்கள்...'மிஷ்காவை பந்து போல் துாக்கி துாக்கி போட்டு பிடித்து விளையாடினர் பனிமனுஷ சிறுமியர்.''போதும் போதும் என்னை விடுங்கள்...'' மிஷ்கா கூறியதும் இறக்கி விட்டனர்.பின், சூச்சூவும், மிஷ்காவும் தனியாக ஒதுங்கினர்.''உங்கள் பனிக் குகை வீடுகளில் குளிரே தெரியவில்லையே...''ஆர்வமுடன் கேட்டாள் மிஷ்கா.'எவ்வளவு குளிர் வந்தாலும், எங்கள் பனி வீடுகளில் பாதுகாப்பு உண்டு...'திடீரென்று சூச்சூவுக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது. உரத்த குரலில் பாட ஆரம்பித்தாள்.''நல்லா பாடுற சூச்சூ...'''பாராட்டுக்கு நன்றி...'''இப்போது எங்கு போகிறோம்...'''எங்கள் தலைவரிடம் உன்னை அழைத்து சென்று, என்னுடன் பாதுகாப்பாய் வைத்துக் கொள்ள அனுமதி கேட்கப் போகிறேன்...'''அனுமதி கொடுக்கா விட்டால்...'''கடைசி வரை போராடுவேன்...'இரு காட்டெருமை தலைகள் போல் அலங்கரிக்கப்பட்டிருந்த அரியாசனத்தில் உட்கார்ந்திருந்தார், பனி மனுஷங்களின் தலைவர்.அவரின் முன் முழங்காலிட்டாள் சூச்சூ.'வணங்குகிறேன் தலைவரே...''வணக்கம்... என்ன ஒரு மனித சிறுமியுடன் வந்திருக்கிறாய்...''இவளை என்னுடன் வைத்துக்கொள்ள அனுமதி கொடுங்கள்...'உடனே, 'அனுமதி கொடுக்க கூடாது, கொடுக்கலாம்' என இரு பிரிவுகளாக பனி மனிதர்கள் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டனர்.'அனுமதி கொடுக்கவில்லை என்றால் என்னை உயிருடன் பார்க்க முடியாது...''சரி... முதல் ஒரு மாதம் நன்னடத்தைக்காலம். மனித சிறுமியால் எந்த பிரச்னையும் வரவில்லை என்றால் தொடர்ந்து நீ வைத்திருக்கலாம்...''நன்றி தலைவரே...'இருவரும் ஆளுக்கொரு எருமையில் ஏறினர்.''சூச்சூ... எனக்கு பசிக்கிறது. மாமிசத்தை தவிர வேறு எதுவும் தின்ன, குடிக்க கிடைக்காதா...'''எருமை பால் கிடைக்கும்... தருகிறேன். வயிறு முட்ட குடி...'ஒரு வீட்டின் முன் இருவரும் இறங்கினர்.ஒரு கலசத்தில் பால் கொண்டு வந்து நீட்டினாள் சூச்சூ. வாங்கி மடக் மடக்கென்று குடித்த மிஷ்கா, தீவிர யோசனையில் ஆழ்ந்தாள். கண்களில் கண்ணீர் பொங்கியது.'என்ன மிஷ்கா அழற...'''நான் இங்கு உல்லாசப் பயணம் வரவில்லை. காணாமல் போன, என் தந்தையை மீட்க வந்திருக்கிறேன். அவர் காணாமல் போய், 10 நாட்கள் ஆகின்றன...'''கவலைப்படாதே... இமயமலை என் வீட்டு கொல்லைப்புறம். உன் தந்தையை மீட்டு தருகிறேன்...'''உண்மையாகவா சொல்ற...'''ஆமா... உன் தந்தையின் ஒளிப்படம் இருந்தா காட்டு...'பதுக்கியிருந்த ஒளிப்படத்தை எடுத்து காட்டினாள் மிஷ்கா.இருவருக்கும் பின்னிருந்து எட்டி ஒளிப்படத்தை பார்த்த சூச்சூவின் பாட்டி, 'ஓ இவனா... உயிருடன் மீட்க வாய்ப்பே இல்லை...' என்றாள்.''என் அப்பாவை மீட்க வழி இல்லை என்றால் என்னை கொன்று தின்று விடுங்கள்...'' கிரீச்சிட்டாள் மிஷ்கா.- தொடரும்...- மீயாழ் சிற்பிகா