பாதம் தொட்டு...
சென்னை, மயிலாப்பூர், எம்.சி.டி.எம்.உயர்நிலைப் பள்ளியில், 2011ல், 8ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்! இயற்பியல் பாட வகுப்பு என்றாலே வேப்பங்காய் போல் கசப்பாக உணர்வேன். எவ்வளவு முயன்றும் புரியாமல் தவித்தேன். புதிதாக வந்திருந்த ஆசிரியை சுகந்தா தியாகராஜன் வித்தியாச அணுகுமுறையில் பாடம் நடத்தினார். புத்தகத்தில் தராதவற்றை செயல்முறை வழியே கற்றுக் கொடுத்தார். படம் வரைந்து, விளக்கி புரிய வைத்தார். அது, இயற்பியல் மீது பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. கூச்ச மனோபாவத்தை தகர்த்து, இயல்பாக உரையாடி சந்தேகங்களை தீர்த்தார். இது, நம்பிக்கையையும், தைரிய அணுகுமுறையை வளர்த்தது. புரிந்து படித்ததால், பொதுதேர்வில், இயற்பியல் பாடத்தில், பள்ளியில் முதன்மை மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றேன். அதற்காக பரிசு வாங்கிய போது, மிகவும் நெகிழ்ந்து பாராட்டினார் ஆசிரியை.எனக்கு, 25 வயதாகிறது; பொறியாளராக பணியாற்றுகிறேன். பணியில் ஏற்படும் சந்தேகங்களை, பொறுப்பில் உள்ளவர்களிடம் பயமின்றி கேட்டு தெளிவு ஏற்படுத்திக் கொள்கிறேன். இதுபோல், தன்னம்பிக்கையுடன் செயல்பட கற்றுத்தந்த ஆசிரியையின் பாதங்களை, இதயத்தால் தொட்டு வணங்கி வாழ்கிறேன்.- ஆர்.நரேஷ், சென்னை.