நீர் மான்!
உலகில், 56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன உயிரினங்கள், அழிவின் விளிம்பில் உள்ளன. இதை ஐ.நா., பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் உறுதி செய்துள்ளது. அவற்றில் ஒன்று, நீர் மான். செர்விடே என்ற விலங்கின குடும்பத்தை சேர்ந்தது. மிகச் சிறிய ஆசிய மான். உருவத்தில் கஸ்துாரி மான் போல் இருக்கும். கொம்பு கிடையாது.கிளை மான் என்ற விலங்கினம் ஒன்று உள்ளது. இதில், ஆணுக்கு கொம்பு உண்டு. நீர் மான் இனத்தில், ஆணுக்கு, வாய் பக்கவாட்டில், கூரிய கோரைப் பற்கள் தந்தம் போல் அமைந்து இருக்கும். அது, இரண்டு அங்குலம் நீளத்தில் வளரும்.உருவ அமைப்பு தான், நீர் மான் இனத்தை பிரத்யேகமாக காட்டுகிறது. இது கிழக்காசிய நாடான தென்கொரியாவில் வளமான ஆற்றுப்பகுதியில் வாழ்கிறது. அண்டை நாடான சீனாவில் யாங்சே நதிப் பள்ளத்தாக்கிலும் காணப்படுகிறது. நீரின் அடிப்பகுதியில் வளரும், பசுமையான தாவரங்களை விரும்பி உண்ணும். குறிப்பாக, நார்ச்சத்து உள்ள, கரடு முரடான புற்களை அதிகம் விரும்பும். ஒரே நேரத்தில் பல குட்டிகளை ஈனும். இந்த அழகிய மான் இனம் தற்போது, அழிவின் விளிம்பில் உள்ளது.இந்தியாவில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன விலங்குகள், அழிவின் விளிம்பில் உள்ளன. காடுகளை அழித்து சுற்றுலா தலங்கள் அமைப்பது, இறைச்சிக்காக, மருத்துவத்திற்காக விலங்குகளை அழித்தல், காட்டுத் தீ, சட்ட விரோதமாக வேட்டை என, காடுகளில் விலங்குகளின் எண்ணிக்கை குறைகிறது. - வி.திருமுகில்