பெருமிதம்
திண்டுக்கல் மாவட்டம், பாரதிபுரம், சவுராஷ்டிரா ஸ்ரீவரதராஜா உயர்நிலைப் பள்ளியில், 1979ல், 5ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!விளையாட்டு பயிற்சி ஆசிரியர் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர். மாணவர்களிடம் சிகரெட் வாங்கி வர சொல்வார். அன்று, என்னை வாங்கி வர சொன்னார்.அதை மறுத்து, 'என் வீடு, பள்ளிக்கு மிக அருகில் இருக்கிறது. என் தந்தை பார்த்தால் பின்னி எடுத்து விடுவார்...' என்று விளக்கம் கூறினேன்.மனம் உறுத்தலாக இருந்ததால் உடன் படித்தவர்களுடன் விவாதித்தேன்.பின், 'தவறான பாதையில் நடத்தும் செயல் இது...' என முடிவு செய்தோம்.நண்பன் ரவியுடன் துணிச்சலாக தலைமை ஆசிரியர் வெங்கடாஜலபதியை சந்தித்து புகார் தெரிவித்தோம்!மிகுந்த கண்ணியத்துடன், 'இந்த குற்றச்சாட்டை பலரும் கூறுகிறீர்கள். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க எழுத்து பூர்வமாக புகார் வேண்டும்...' என்றார். அதன்படி எழுதி கொடுத்தோம். நடவடிக்கை பாய்ந்தது. தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார் அந்த ஆசிரியர். தண்டனை முடிந்து பணியில் சேர்ந்த போது யாரிடமும் சிகரெட் வாங்கி தர சொல்லவில்லை. திருந்தியதை அறிந்து மகிழ்ந்தோம்.எனக்கு, 55 வயதாகிறது; புரோகிதராக பணி செய்து வருகிறேன். புகை, மது போன்ற எந்த தீய பழக்கங்களும் என்னிடம் இல்லை. இதை பெருமிதமாக பதிவு செய்கிறேன். அந்த ஆசிரியரை நல்வழிப்படுத்திய திருப்தி, பெருமிதமாக மனதில் பதிந்து உள்ளது.- எம்.ஆர்.ஜெயச்சந்திரன், திண்டுக்கல்.தொடர்புக்கு: 92457 35784