உள்ளூர் செய்திகள்

புத்திசாலி முருகன்!

முருகனும், அவன் நண்பர்களும், பண்ணையில் வேலை செய்யும், ஏழை குடும்ப குழந்தைகள். அன்று, பண்ணையார் ராஜலிங்கம் வீட்டு வாசலில் விளையாடினர்.பண்ணை வீட்டிற்குள், நெல் கிடங்கு இருந்தது. மூட்டை கட்ட வேண்டிய நெல்லை, ஒரு அறையில் போட்டிருந்தனர். அதை உதவியாளருடன், பார்வையிட்டார் பண்ணையார். வெளியே வந்த போது நேரம் பார்க்க முயன்றார். அவரது கை கடிகாரத்தை காணவில்லை.'நெல்லை அளந்த போது, கை கடிகாரம் தவறியிருக்க வேண்டும்' என எண்ணி, மீண்டும் கிடங்கிற்குள் சென்று தேடினார். கிடைக்கவில்லை.வருத்தத்துடன், வெளியில் வந்தார் பண்ணையார்.தாத்தா காலத்திலிருந்தே, அது மதிப்பிற்கு உரிய குடும்ப பொக்கிஷம்.வெளியில் விளையாடிய சிறுவர்களை அழைத்து, ''தம்பிகளா... நெற்குதிரில், என் கை கடிகாரம் விழுந்து விட்டது. அதை தேடி கண்டுபிடித்தால் பரிசு தருவேன்...'' என்றார் பண்ணையார்.உற்சாகத்துடன், கூச்சல் எழுப்பியவாறு, பண்ணைக்குள் சென்றனர் சிறுவர்கள். நெற்குதிருக்குள் துளாவினர்; கை கடிகாரம் கிடைக்கவில்லை. உற்சாகம் இழந்து தோல்வியை தெரிவித்து வீட்டிற்கு சென்றனர்.மிகவும் பொறுமைசாலியும், புத்திசாலியுமான சிறுவன் முருகன், பண்ணையாரை சந்தித்து, ''ஐயா... மீண்டும் ஒருமுறை தேடிப் பார்க்கிறேன்...'' என அனுமதி வேண்டி நின்றான்.பண்ணையார் ஒப்புக்கொள்ள, நெற்குதிர் அறைக்கு சென்றான்.சிறிது நேரத்திற்கு பின் -கை கடிகாரத்தோடு வந்தான் முருகன்.மகிழ்ச்சியில் திளைத்தார் பண்ணையார்.''கை கடிகாரத்தை நீ எப்படி எடுத்தாய்...'' முருகனிடம் வினவினார் பண்ணையார்.''நெற்குதிருக்குள் தேடிய போது அனைவரும் பேசியபடி இருந்தோம். அந்த சத்தத்தில், கை கடிகாரத்திற்கே உரிய, 'டிக்... டிக்...' ஒலியை கேட்க முடியவில்லை. சூழல் அமைதியாக இருந்தால் மட்டுமே, ஒலி கேட்கும் என்று எண்ணினேன்... ''அதன்படி, அமைதியாக நெற்குதிருக்குள் அமர்ந்தேன். காதுகளை உன்னிப்பாக வைத்திருந்தேன். டிக்... டிக்... ஒலி சன்னமாக கேட்டது. அந்த பகுதியை மட்டுமே துளாவினேன்; தேடியது கிடைத்தது...'' என்றான் முருகன்.''நீ அறிவு கூர்மை உடையவன்; கெட்டிக்காரன்...''பாராட்டி பரிசு வழங்கினார் பண்ணையார்.குழந்தைகளே... சிந்தித்து செயல்பட்டால், சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும்!ஸ்ரீமல்லிகா குரு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !