உள்ளூர் செய்திகள்

சிந்தனை மாற்றம்!

ராமநாதபுரம் மாவட்டம், கன்னிராஜபுரம், ஷத்திரிய இந்து நாடார் நடுநிலைப் பள்ளியில், 2011ல், 3ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...வகுப்பாசிரியை சுதிமாலினி கண்டிப்பானவர். பார்த்தாலே பயமாக இருக்கும். இதனால், அவர் தரும் வீட்டுப் பாடங்களை ஒழுங்காக செய்து விடுவேன்.ஒரு நாள், 'டிவி' நிகழ்ச்சிகள் பார்த்து, இரவு நேரங்கடந்து துாங்கினேன். காலை தாமதமாக எழுந்து, பள்ளிக்கு சென்றேன். இதற்காக மிகவும் கோபத்தில், தண்டனை தந்தார் வகுப்பாசிரியை. அவர் மீது வெறுப்பு ஏற்பட்டது.அடுத்து, என் பிறந்த நாள் வந்தது; இனிப்பு கொடுக்க சென்றேன்.மிகவும் மென்மையாக வாழ்த்தி, 'உன்னை கடுமையாக தண்டித்து விட்டேன். வீட்டுக்கு சென்ற பின், இதை எண்ணி வருந்தினேன். இனிமேல், வகுப்புக்கு தாமதமாக வரக் கூடாது...' என அறிவுரை வழங்கினார்.அது மனதில் பதிந்து, 'தாமதமாக நான் சென்றதால் தானே, ஆசிரியை தண்டிக்கும் கட்டாயம் ஏற்பட்டது' என்ற எண்ணம் ஏற்பட்டது. உரிய நிவாரணம் பெற விரும்பினேன்.அன்று முதல், எந்த நிகழ்வுக்கும், தாமதமாக செல்வதை தவிர்த்து வருகிறேன்.என் வயது, 20; தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறேன். இன்று வரை, எந்த நிகழ்வும் துவங்கும் முன்னரே செல்வதை வழக்கமாக கொண்டுள்ளேன். அந்த ஆசிரியை தந்த தண்டனையால் வாழ்வில் ஒரு தீய பழக்கம் மறைந்தது!- ஆ.சரண்யா, ராமநாதபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !