தடுப்பூசி தடயம்!
புதுச்சேரி, பிள்ளையார் குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில், 1966ல், 3ம் வகுப்பு படித்த போது, தலைமை ஆசிரியராக இருந்தார் சுந்தரமூர்த்தி. மாணவர்களின், கை, கால் விரல்களில் நகம் வெட்டி சுத்தம் செய்வார். சுய சுத்தம் பேணுவது குறித்து அறிவுரைப்பார். குறிப்பிட்ட கால இடைவெளியில், மாணவர்களின் ஆரோக்கியம், கல்வி திறனை சோதிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த காலத்தில், பெரியம்மை என்ற கொடிய நோய் பரவியது. அதை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போட ஏற்பாடு செய்தார். கிராமத்தில் நோய் கண்ட சிலர் இறந்து விட்டனர். இதற்கு தடுப்பூசி தான் காரணம் என புரளி கிளம்பியது. பெரும் பீதி பரவியது. பலரும் வீட்டை பூட்டி, வயல் வெளிகளிலும், புதரிலும் ஓடி ஒளிந்ததால், ஊரே வெறிச்சோடியது. தண்டோரா போட்டு அறிவித்து, அனைவரையும் பள்ளிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார். தகுந்த அறிவுரை தந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு ஊட்டினார். மருத்துவர், காவலர் உதவியுடன் இதை சாதித்தார். எனக்கு, 66 வயதாகிறது; அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். பள்ளியில் படித்த போது இடது கையில் போட்ட தடுப்பூசியின் தடயம் வடு மாறாமல் நினைவை தாங்கியுள்ளது. அந்த தலைமையாசிரியர் ஆரோக்கியத்துடன், 100 வயதை கடந்து வாழ்வது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. - கே.பழனி, புதுச்சேரி.தொடர்புக்கு: 98422 22867