உள்ளூர் செய்திகள்

சிங்கார வனம்!

சிங்காரவனத்தில் அன்று, சிங்கராஜா தலைமையில், பொதுக்குழு கூட்டம் நடக்க இருந்தது. அதற்காக கூடியிருந்தன விலங்குகள்.வனப் பாதுகாப்பு பற்றி பேச வந்த குதிரை, 'சிங்கராஜா... நம் சிங்கார வனத்தின் வளங்களை வேட்டைக்காரர்கள் அழிப்பது, நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது...' என்றது.கூடியிருந்த காட்டு விலங்குகள் எல்லாம் இதை ஆமோதித்தன.'சிங்கராஜா... தந்தத்துக்காக, என் இனத்தையே வேட்டையாடுகின்றனர்...'கண்ணீர் வடித்தபடி கூறியது யானை.'அதுமட்டுமா... தாவி விளையாடும் மரங்களை வெட்டி, வனத்தின் பசுமையை அழிப்பதால், ஆரோக்கிய காற்றை சுவாசிக்க முடியவில்லை...' ஆதங்கத்தை எடுத்து கூறியது குரங்கு.'புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றத்தால் உயிரினங்கள் அழியும் நிலையில் உள்ளன...'உணர்ச்சி பொங்க கூறியது ஆமை.இவற்றை ஊன்றி கவனித்தது சிங்கராஜா. பின், 'சிங்கார வனவாசிகளே... உங்களை பாதுகாப்பது என் கடமை. வனத்தை அழிப்பதால், மனிதர்களும் பாதிக்கப்படுவதை அவர்கள் உணர்வதில்லை... அதை வலியுறுத்தலாம்...' என்றது. அதன்படி ஒரு செயல் திட்டம் வகுத்தது. அது வனம் முழுதும் எதிரொலித்தது. அன்றைய நாளை, மகிழ்ச்சியுடன் கழித்து, இரவு உறங்கின விலங்குகள்.அதேசமயம், வேட்டையாடுவது பற்றி சகாக்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தான் வேட்டைக்காரன்.காட்டில், திடீர் மழை பொழிய ஆரம்பித்து. ஊர் எல்லாம் வெள்ளம் சூழ்ந்தது.பேரிடரில், சிக்கி தவித்தனர் வேட்டைக்காரர்கள்.'ஐயோ... காப்பாற்றுங்கள்...'வெள்ளத்தில் மூழ்கும் நிலையிலிருந்த வேட்டை தலைவர் அலறினார்.அந்த குரல் சிங்கராஜாவின் குகை வரை ஒலித்தது. யானையை அழைத்து, வேட்டைக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்திலிருந்து காப்பாற்ற கட்டளையிட்டது சிங்கராஜா. அதை ஏற்று, விரைந்து சென்று, வெள்ளத்தில் தத்தளித்த வேட்டைக் காரர்களை துதிக்கையால் மீட்டது யானை. பின் சிங்கராஜா குகையருகே அழைத்து வந்தது.பயத்துடன் நின்றிருந்தனர் வேட்டைக்காரர்கள். அப்போது வந்த சிங்க ராஜா, 'நீங்கள் செய்யும் தீமையால், மற்ற உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. பருவநிலை மாற்றத்தால், கடும் மழை பெய்கிறது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்து, அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது...'வனம் இயற்கையின் மூலதனம். அதில், உயிரினங்கள் ஒன்றையொன்று, சார்ந்து வாழ்கின்றன. இதை உணர்ந்து சுற்றுசூழலை பேணி பாதுகாக்க வேண்டும்; மரங்கள் தான், மாசடைந்த காற்றை துாய்மைப்படுத்தி ஆரோக்கியம் பேணுகிறது...' என்று போதித்தது.தெளிந்த மனதுடன், 'வனத்தின் பெருமையை உணர்ந்து விட்டோம். இனி, மேம்படுத்துவோம். நீங்கள் செய்த பேருதவிக்கு கைமாறாக, எந்த விலங்கையும், வேட்டையாட மாட்டோம்...' என்று உறுதியளித்தார் வேட்டை தலைவர்.சிங்கார வனத்தில் பசுமையும், வளமையும் நிறைந்தது. மகிழ்ந்து கொண்டாடின வன விலங்குகள்.குழந்தைகளே... உயிரினங்கள் வாழ, வழிவகை செய்யும் வனங்களை பேணி பாதுகாப்போம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !