உள்ளூர் செய்திகள்

புகழ் தரும் எழுத்து!

செங்கல்பட்டு, புனித சூசையப்பர் உயர்நிலைப்பள்ளியில், 1974ல், 8ம் வகுப்பு படித்தேன். தமிழாசிரியராக இருந்த புலவர் கந்தசாமி, பழந்தமிழ் இலக்கியத்தில் நிபுணத்துவம் பெற்றவர். ஒவ்வொரு நாளும் கையெழுத்து பயிற்சி ஏட்டை ஆய்வு செய்வார். அதில் வடிவமாக எழுதியிருந்தால், 'நன்று' என குறிப்பிட்டு பாராட்டுவார். அதை எழுதியிருக்கும் விதமே அலாதியாக இருக்கும். வகுப்பில் பாடங்களை கலகலப்பாக நடத்துவார். பழந்தமிழ் இலக்கியங்களான கம்பராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி செய்யுள்களை ராகத்தோடு பாடி, மனதில் பதிய வைப்பார். பாடல் பொருளையும், மொழியின் சிறப்பையும் தெள்ள தெளிவாக எடுத்துரைப்பார்.வகுப்பறையில் அவர் ஊட்டிய மொழி ஆர்வத்தால், அந்த கோடை விடுமுறையில், பொன்னியின் செல்வன் நாவலின் அனைத்து பாகங்களையும் படித்து முடித்தேன். தற்போது, என் வயது, 61; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பத்திரிகைகளுக்கு, கதை, கவிதை, தமாசு போன்ற படைப்புகளை எழுதி வருகிறேன். இதற்கு அந்த ஆசிரியர் கற்பித்த விதமே துணையாக உள்ளது. அவர் நினைவாக இன்றும் கவனம் செலுத்தி, வடிவமாக எழுதி வருகிறேன்.- சி.பன்னீர்செல்வம், செங்கல்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !